கோலாலம்பூர், 14 ஜனவரி (பெர்னாமா) -- 60 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசிய இந்தியர்களின் உற்றத் தோழனாகவும் தகவல் பரிமாறும் முதன்மை களமாகவும் திகழ்ந்து வரும் நாட்டின் முதன்மை வானொலிகளில் ஒன்றான மின்னல் எஃப்.எம், 20 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப் பொலிவு, புதிய உள்ளடக்கங்கள், புதிய நிகழ்ச்சிகளுடன் அதன் நேயர்களைச் சந்திக்க தயாராகியுள்ளது.
நவீனத்தை சேர்க்கும் இம்மாற்றம் இளம் தலைமுறையை வானொலியுடன் இணைக்கும் முக்கிய நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கால மாற்றத்திற்கு ஏற்றவாறு அதன் ஒலியலையில் மின்னல் எஃப்.எம் ஏற்படுத்தியுள்ள இம்மாற்றங்கள் அனைத்தும் நாளை பிறக்கவிருக்கும் தைத்திருநாளில் அரங்கேறவுள்ளன.
இவ்வேளையில், இந்தப் புதிய அடையாளம் இளம் தலைமுறையை வானொலியுடன் நெருக்கமாக இணைக்கும் பாராட்டுக்குரிய முயற்சி என்று இதனை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.
''நான் கேட்டு வளர்ந்த காலை கதிர் எனும் நிகழ்ச்சி தொடங்கி பல நிகழ்ச்சிகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளனர். காலத்திற்கேற்ற மாற்றம். இளைஞர்களுக்காகவே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டது போலதான் உள்ளது. அதிகம் நவீனப்படுத்தியுள்ளன. எனக்கும் ஆவலாக உள்ளது. புதிய தலைமுறையினருக்கு நிச்சயம் உற்சாகமத்தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன்,'' என்றார் அவர்.
சமூக ஊடகம், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என பாரம்பரிய ஊடகங்களுக்கு ஏற்பட்டுள்ள சவாலான சூழலை கையாளும் முயற்சியாகவும் இம்மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளையில், தமிழ் மணம் மாறாமலும் பண்பாடு தவறாமலும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் தொடர்ந்து படைக்கப்படும் என்று மின்னல் எஃப்.எம் நிர்வாகி குமரன் சுப்ரமணியம் கூறினார்.
''இம்மாற்றம் புதிய நேயர்களை எங்கள் வசம் கொண்டு வரும் என்பதில் எங்களுக்குச் சந்தேகமில்லை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நேயர்களுடனான கலந்துரையாடலை மேற்கொள்ளப் போகிறோம். அதன் மூலம் அவர்களின் எதிர்பார்ப்புகளைத் தெரிந்துகொண்டு அவற்றை பூர்த்தி செய்துக்கொண்டே இருப்போம். மொழியை இழக்காமல், அதனை விட்டுக்கொடுக்காமல் இவை அனைத்தையும் மேற்கொள்வோம்,'' என்று அவர் விவரித்தார்.
அதுமட்டுமின்றி, சிறு வணிகர் முதல் தொழிலதிபர் வரைக்குமான அனுபவப் பகிர்வும் வர்த்தக நிகழ்ச்சிகளும் இடம்பெறும் என்று குமரன் குறிப்பிட்டார்.
வணக்கம் மின்னல், இளமை உல்லாசம், இசையும் இசையும், தீரா இசை, காற்றின் மொழி, மின்னலின் இடைவிடா இசை போன்ற புதியப் பெயர்களுடன் நிகழ்ச்சிகளைப் படைக்கவிருக்கும் மின்னலின் அறிவிப்பாளர்கள் சிலரையும் பெர்னாமா செய்திகள் சந்தித்தது.
''நாளையிலிருந்து அனைத்தும் மாற்றம் காணவுள்ளன. உற்ற நேயர்கள் என்றைக்குமே எங்களுக்குப் பக்கபலம். இந்தத் தலைப்புகள் அனைத்தும் அவர்கள் தேர்ந்தெடுத்தவை தான். நேயர்களுக்கேற்பவே அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கவுள்ளோம்,'' என்று தெய்வீகன் தாமரைச்செல்வன் தெரிவித்தார்.
''இன்றைய தொழில்நுட்ப காலத்தில் தமிழை தடம் மாறாமல் கொண்டு சேர்ப்பதே பெரிய சவால். அனைத்து இடங்களிலும் மொழி கலப்பு வந்துவிட்டது. மின்னல் எஃப்.எம்-இல் மட்டும் 99 விழுக்காடு தமிழ்மொழியை மட்டுமே பேசுகிறோம். இன்றைய இளைஞர்கள் வானொலியை நம்பி இருக்கும் காலம் மாறிவிட்டது. எனினும், தமிழ், தகவல், நிகழ்ச்சிகள் மூலம் அவர்களை ஈர்க்க முயற்சிக்கிறோம்,'' என்றார் சுகன்யா சதாசிவம்.
''மின்னல் எஃப்.எம்-இன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பது இம்மாற்றத்திலிருந்து எங்களுக்குத் தெரியவருகிறது. கல்லூரி, பள்ளிக்கூட மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள் வரவுள்ளன. எல்லாமும் சரியாக உள்ளன; அவற்றை இளைஞர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்று கிஷன் ராஜ் நாகராஜன் கூறினார்.
இன்று, கோலாலம்பூர், அங்காசப்பூரியில் நடைபெற்ற இத்தொடக்க விழாவில் தொடர்பு அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் மனோ வீரபத்திரன், ஆர்.டி.எம்-இன் வியூகங்களுக்கான ஒளிபரப்புத் துறை துணை தலைமை இயக்குநர் ஹம்சா இஷாக் உட்பட மின்னல்எஃப்.எம் பணியாளர்களும் கலந்துகொண்டனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]