கோலாலம்பூர், டிசம்பர் 23 (பெர்னாமா) -- அரச மன்னிப்பு தொடர்பான நீதிமன்றத்தின் முடிவை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும்.
அச்சூழ்நிலையைச் சீர்குலைக்கவோ அல்லது பதற்றத்தை அதிகரிக்கவோ கூடாது என்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் மற்றும் சட்ட விதிகளைத் தவிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு மற்றும் சட்ட வழிமுறைகள் உட்பட நீதிபதியின் தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நீதித்துறை எவ்வித வெளிப்புறத் தாக்கங்களிலிருந்தும் நிச்சயம் விடுபட்டு தொடர்ந்து இருக்கும் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டிருந்தார்.
இதன் தொடர்பில் மடானி அரசாங்கம் சட்டத்தின் ஆட்சி மற்றும் அதிகாரப் பிரிவினைக் கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிக்கிறது.
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் தமது எஞ்சிய சிறைத் தண்டனை காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதி கோரி செய்த அரச மன்னிப்பு தொடர்பான அவரின் நீதிமன்ற சீராய்வு விண்ணப்பத்தைக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
2024ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி நடைபெற்ற 61வது மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்தின்போது அதன் தொடர்பில் விவாதிக்கப்படாததோடு முடிவெடுக்கப்படாததையும் கண்டறிந்தப் பிறகு நீதிபதி ஆலிஸ் லோக் யீ சிங் அம்முடிவைச் செய்தார்.
இந்த அரச மன்னிப்பு கூட்டரசு அரசியலமைப்பின் சட்டவிதி 42ஐ பின்பற்றாததால் அது அதிகாரப்பூர்வமற்றது என்று லோக் தீர்ப்பளித்தார்.
அத்தீர்ப்பைத் தொடர்ந்து எஞ்சிய சிறைத் தண்டனைக் காலத்தை நஜிப் காஜாங் சிறையில் கழிக்க வேண்டும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)