பெட்டாலிங் ஜெயா, 15 பிப்ரவரி (பெர்னாமா) -- மலேசியக் கிண்ண காற்பந்து போட்டி.
பெட்டாலிங் ஜெயா மாநகராண்மைக் கழக அரங்கில் நேற்று நடைபெற்ற இரண்டாம் காலிறுதி சுற்றில் சிலாங்கூர் எஃப்.சி 5-1 என்ற கோல் எண்ணிக்கையில் நெகிரி செம்பிலான் எஃப்.சி-யை வீழ்த்தியது.
இதன் வழி சிலாங்கூர் வெற்றிகரமாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
முதல் காலிறுதியில் 1-0 என்ற நிலையில் வெற்றிப் பெற்ற சிலாங்கூர், தற்போதைய புள்ளிகளோடு சேர்த்து 6-1 என்ற மொத்த கோல் எண்ணிக்கையில் அடுத்துச் சுற்றில் கால் வைத்துள்ளது.
ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே சிலாங்கூர் தாக்குதல் ஆட்டக்காரர் ஃபைசால் ஹலிம் மூலம் அவ்வணிக்கான முதல் கோல் அடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 24 மற்றும் 30-வது நிமிடங்களில் அதன் இரண்டாம் மூன்றாம் கோல்கள் போடப்பட்டன.
குவென்டின் செங் அடித்த நான்காவது கோலின் வழி முதல் பாதி நிறைவடைந்தது.
கிம் பான் கொன் தலைமையிலான சிலாங்கூரின் ஐந்தாவது கோல் இரண்டாம் பாதி ஆட்டத்தில் போடப்பட்ட வேளையில், நெகிரி செம்பிலான் அணியின் ஒரே கோல் 73-வது நிமிடத்தில் அடிக்கப்பட்டது.
அரையிறுதி சுற்றில், சிலாங்கூர் கூச்சிங் சிட்டியுடன் களம் காணவுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)