Ad Banner
Ad Banner
 பொது

அனைத்துலக போதைப்பொருள் கும்பல் பயன்படுத்தும் உத்திகளை பி.டி.ஆர்.எம் அடையாளம் கண்டுள்ளது

20/12/2025 06:10 PM

கோலாலம்பூர் டிசம்பர் 20 (பெர்னாமா) -- வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருளை கடத்தி வருவதற்கு அனைத்துலக போதைப்பொருள் கும்பல் பயன்படுத்தும் மூன்று முதன்மை செயல்பாட்டு உத்திகளை அரச மலேசிய போலீஸ் படை PDRM அடையாளம் கண்டுள்ளது.

ஆழ்கடல் வழியாகச் செல்லும் போக்குவரத்து சமூக ஊடகங்கள் மூலம் சேர்த்துக் கொள்ளப்படும் ‘drug mules’ எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் அனைத்துலக சரக்கு கொள்கலன் சேவையை தவறாக பயன்படுத்துதல் ஆகியவையே அந்த முதன்மை உத்திகள் என்று புக்கிட் அமான் JSJN இயக்குநர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் கூறினார்.

இவ்வாண்டு ஜனவரி தொடங்கி டிசம்பர் 18-ஆம் தேதி வரையில் JSJN மேற்கொண்ட தொடர்ச்சியான உளவு நடவடிக்கைகளின் மூலம் அந்த உத்திகள் கண்டறியப்பட்டதாக டத்தோ ஹுசேன் தெரிவித்தார்.

''இந்த கும்பல் மீன்பிடி படகுகளைப் பயன்படுத்தி ஆழ்கடலுக்குள் சென்று, பெரிய கப்பலில் இருந்து போதைப்பொருளை எடுத்து பின்னர் மலேசிய கடல் பகுதிக்குள் கொண்டு வருகிறது.'' என்றார் டத்தோ ஹுசேன் ஒமார் கான் 

சமூக ஊடகங்கள் வழியாக இலவச சுற்றுலா பயணம் அல்லது இலாபகரமான வெகுமதிகளை வழங்குவதன் மூலம் தனிநபரகளை போதைப்பொருள் கடத்துவதற்கு பயன்படுத்துவதும் ஒரு உத்தியாகும்.

போதைப்பொருள் கட்டிகளை விழுங்குவது உட்பட மறைத்து வைப்பது பயணப் பெட்டியில் மறைத்து வைப்பது அல்லது மூன்றாவது நாடுகளுக்கு கடத்திச் செல்வது, அவர்களுக்கு கொடுக்கப்படும் வேலையாகும்.

கொள்கலன் சேவையை தவறாக பயன்படுத்துவது என்பது சுங்க ஆவணங்களில் சட்டப்பூர்வமான பொருட்களை அறிவித்து சம்பந்தப்பட்ட கொள்கலனை, போதைப்பொருளை மறைக்க மாற்றியமைக்கப்படுவதும் ஒரு உத்தியாகும் என்றும் ஹுசேன் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)