Ad Banner
Ad Banner
 பொது

போதைப்பொருள் தயாரிப்பு நடவடிக்கை முறியடிப்பு

23/12/2025 05:34 PM

பாலிக் பூலாவ், டிசம்பர் 23 (பெர்னாமா) -- பாலிக் பூலாவ், ஜாலான் தெலுக் பஹாங்கில் உள்ள டுரியான் தோட்டம் ஒன்றில் ஷாபு வகை போதைப் பொருளைத் தயாரிக்கும் சட்டவிரோத ஆய்வகத்தின் நடவடிக்கையைப் போலீசார் முறியடித்தனர்.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பினாங்கில் நடத்தப்பட்ட சில அதிரடி சோதனைகளில் மூன்று அந்நிய நாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதோடு மூன்று கோடியே 80 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதன் வழி அந்நடவடிக்கை முறியடிக்கப்பட்டதாகப் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை ஜே.எஸ்.ஜே.என் இயக்குநர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

உளவுத் தகவலின் அடிப்படையில் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி ஜார்ஜ்டவுன், ஜாலான் குருத்வாராவில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீடொன்றில் புக்கிட் அமான் ஜே.எஸ்.ஜே.என் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 32 லிருந்து 38 வயதான அம்மூன்று அந்நிய ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக டத்தோ ஹுசேன் ஒமார் கூறினார்.

''இதற்கிடையில் சோதனை நடவடிக்கையின் போது தப்பிக்க முயன்ற மற்றொரு உள்நாட்டு ஆடவர் தப்பியோடி சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அக்கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட்ட மேல் சோதனை நடவடிக்கையில் 36 கிலோகிராம் எடைகொண்டதாக நம்பப்படும் மெதாஃபெதமின் வகை போதைப்பொருள் என்று சந்தேகிக்கப்படும் வெள்ளைப் பொடியையும் போதைப்பொருளைப் பொட்டலமிட பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்களையும் ஜே.எஸ்.ஜே.என் கைப்பற்றியது'', என்றார் டத்தோ ஹுசேன் ஒமார் கான்.

இன்று போதைப்பொருளைத் தயாரிக்கும் ஆய்வகமாகப் பயன்படுத்தப்பட்ட டுரியான் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

ஷாபு வகை போதைப்பொருளைத் தயாரிப்பதற்கான ரசாயணப் பொருள்களும் உபகரணங்களும் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படுவதோடு அவை உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் மலேசியாவில் தயாரிக்கப்படுவதாக ஹுசேன் ஒமார் விவரித்தார்.

இக்கடத்தல் கும்பலின் தலைவர் வெளிநாட்டில் இருந்து இவர்களுக்கு உத்தரவு வழங்கி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் டிசம்பர் 27ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு இவ்வழக்கு 1952ஆம் ஆண்டு அபாயகரப் போதைப்பொருள் சட்டம் செக்‌ஷன் 39Bஇன் விசாரிக்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)