Ad Banner
Ad Banner
 உலகம்

பல்வேறு துறைகளில் இருவழி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதாக இந்தியா- பிரான்ஸ் அறிவிப்பு

18/02/2026 06:40 PM

இந்தியா, 18 பிப்ரவரி (பெர்னாமா) -- மும்பையில் நடைபெற்ற விரிவான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, தற்காப்பு, மேம்பட்ட தொழில்நுட்பங்கள், புத்தாக்கம் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் இருவழி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதாக இந்தியாவும் பிரான்சும் அறிவித்தன.

அனைத்துலக தரத்துடன் இணங்கவும், நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதில் ஆதரவளிக்கவும், இரட்டை வரி தவிர்ப்பு தொடர்பான நடைமுறைகளை இரு நாடுகளும் திருத்தவிருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

''இரு நாடுகளுக்கும் இடையே முதலீடுகளை எளிதாக்குவதற்காக, நமது மக்களும் நிறுவனங்களும் இரட்டை வரிகளை செலுத்தாமல் இருக்க வழிவகுக்கும் ஓர் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடுகிறோம். இந்த நடவடிக்கைகள் நமது இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் இயக்கத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும். மேலும், இது பகிரப்பட்ட செழிப்புக்கான வழியாகும்,'' என்றார் அவர்.

பிரான்ஸ் அதிபர் இம்மேனுவல் மக்ரோனுடனான இருவழி பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நரேந்திர மோடி அவ்வாறு தெரிவித்தார்.

அதேவேளையில், 463 ஏர்பஸ் மற்றும் டாடா ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்பினால், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் H125 ஹெலிகாப்டர் அசெம்பிளி லைனை இம்மேனுவலும் மோடியும் நேற்று செவ்வாய்க்கிழமை இயங்கலை வழியாக தொடக்கி வைத்தனர்.

இந்தியாவும் பிரான்சும் தற்காப்பு மற்றும் விண்வெளி துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இந்த முதல் அசெம்பிளி லைன் தொடக்கி வைக்கப்பட்டதோடு, இந்தியாவில் ஹேம்மர் ஏவுகணைகளை இணைந்து தயாரிப்பதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது.

இதனிடையே, இந்தியா உலகளாவிய கண்டுபிடிப்புகளில் பங்கேற்பது மட்டுமல்லாமல், அவற்றை வழிநடத்தும் வேளையில், புத்தாக்க கண்டுபிடிப்புகளில் இந்தியாவிற்கும் பிரான்சுக்கும் இடையிலான ஆழமான ஒத்துழைப்பிற்கு இம்மேனுவல் மக்ரோன் அழைப்பு விடுத்தார்.

''நமது இரு அறிவு சார்ந்த பொருளாதாரங்களுக்கிடையில் இதற்கு முன்னர் இல்லாத அளவிலான ஒருங்கிணைப்புக்கான தொடக்கப் புள்ளியாக இந்த புத்தாக்க ஆண்டை நாம் மாற்ற வேண்டும். மேலும், இது விண்வெளி, விண்வெளி தற்காப்பு, விவசாயம், சுகாதாரம், நிலையான பொருளாதாரம் மற்றும் படைப்பாற்றல், கலாச்சாரத் தொழில்துறைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவமாகும். அவற்றில் பலவற்றை நாம் உள்ளடக்கலாம்,'' என்று அவர் கூறினார்.

அடுத்த தலைமுறை இயந்திரங்கள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றில் பணியாற்றுவது உட்பட தற்காப்பு மற்றும் உயர் தொழில்நுட்பம் தொடர்பான துறைகளில் ஒத்துழைப்பையும் மக்ரோன் மேற்கோள் காட்டினார்.

மூன்று நாள்கள் அதிகாரப்பூவப் பயணம் மேற்கொண்டு இந்தியாவிற்கு வருகைப் புரிந்திருக்கும் அவர், புதுடெல்லியில் நடைபெறும் ஏ.ஐ உச்சநிலை மாநாட்டிலும் பங்கேற்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)