புது டெல்லி, பிப்ரவரி 18 (பெர்னாமா) -- உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு, AI-இன் பயன்பாடு அதிகரித்து வரும் வேளையில், இந்தியாவிலும் இத்தொழில்நுட்பமும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது.
அதன் ஆற்றலையும், அளவையும் மேம்படுத்த வணிகங்கள், தொடக்க நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் புதிய வழிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
ஏ.ஐ துறையில் மேற்கொள்ளும் ஆய்வுக்கு நிதி வழங்கவும் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் இந்திய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாரம் புது டெல்லியில் நடைபெற்று வரும் ''இந்தியாவில் AI தாக்கம்'' எனும் உச்சநிலை மாநாடு அந்த முயற்சிகள் ஒன்றாகும்.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் இலக்கவியல் சந்தைகளில் ஒன்றான ஏ.ஐ வணிகத்தைத் தவிர்த்து, புத்தாக்கக் கண்டுபிடிப்புகளுக்கும் இந்த மாநாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது குறித்து இதில் கலந்து கொண்டவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
"கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளில் ஏ.ஐ எந்தளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அது மனிதர்களின் சிந்தனையையே மாற்றியது. இது ஓர் அனுபவம். இதற்காக நான் என் நாட்டை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். எண்ணங்கள் மற்றும் புத்தாக்கத்தை செயல்படுத்தும் முறைகளை நான் கற்றுக்கொள்வேன். அதோடு, உங்கள் சிந்தனைகள் மக்களுக்கு எப்படி பயனாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்," என்றார் மாணவர் அதிமேஷ்.
"என்னுடைய திட்டத்தின் பெயர் விரித்ரா. இது ஒரு VTOL. எனவே, இந்தக் குறிப்பிட்ட தயாரிப்பு இந்திய இராணுவத்திற்காக உருவாக்கப்பட்டது. நானும் எனது குழுவினரும் இரண்டு மாதங்கள் தளத்தில் தங்கியிருந்தோம். இவை அனைத்தையும் உள்நாட்டிலேயே மேற்கொண்டோம். இதற்கான செலவுகளுக்கு இந்திய ராணும் முழு நிதியை வழங்கியது. இது ஏ.ஐ-இன் உதவியுடன் இயக்கப்படும் VTOL ஆகும். இதற்குள் ஒரு ஏ.ஐ துணை கணினி உள்ளது. எனவே, புறப்படவும் தரையிறங்கவும், இதற்கு எந்த ஓடுபாதையும் தேவையில்லை. முன்புறத்தில் உள்ள 4 மோட்டார்களைப் பயன்படுத்தி இது நேரடியாக புறப்பட்டு தரையிறங்க முடியும். மேலும் அது காற்றில் பறந்தவுடன், 4 மோட்டார்களும் மூடப்படும். அதோடு, பின்புறத்தில் உள்ள மோட்டார் மட்டுமே இயங்குகிறது மற்றும் ஒரு இறக்கையைப் பயன்படுத்தி, அதை முன்னோக்கி செலுத்த முடியும்," என்றார் பல்கலைக்கழக மாணவர் முஹமட் கயூப்.
புது டெல்லியில் உள்ள பாரத் மண்டப மாநாட்டு மையத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் தொழில்துறை தலைவர்கள், தொழில்நுட்ப ஆர்வலர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)