கோலாலம்பூர், டிசம்பர் 01 (பெர்னாமா) -- அமைச்சரவையில் காலியாக இருக்கும் சில அமைச்சரவைப் பதவிகள் நிரப்படும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார்.
அதிலும் பெரிய அளவிலான மறுசீரமைப்பு எதுவும் இல்லாமல் தற்போது அமைச்சர் பதவிகள் மட்டுமே நிரப்பப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
''நாம் சில காலியிடங்களை நிரப்ப வேண்டும். ரொம்ப பெரிய மாற்றம் செய்ய வேண்டுமானால் அதற்கு நீண்ட நேரம் தேவைப்படும். இந்த அமைச்சரவை இன்னும் ஓராண்டு மட்டுமே செயல்படும். எனவே பெரியளவிலான மறுசீரமைப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். எந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நான் பரிசீலித்து வருகிறேன். ஆனால் காலியிடங்களை நிரப்புவது அவசியமாகின்றது,'' என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.
இன்று கோலாலம்பூரில் பெரோடுவாவின் முதல் மின்சார வாகனம் EV, QV-E அறிமுக விழாவில் கலந்துகொண்ட டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் அதனைக் கூறினார்.
தற்போது டத்தோ ஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனி இயற்கைவளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சராகவும் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்சா அசிசான் பொருளாதார அமைச்சராகவும் உள்ளனர்.
அதோடு, உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சாம்ப்ரி அப்த் காதிர், உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மற்றும் பிரதமர் துறையின் மத விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் நயீம் மொக்தார் ஆகியோரின் மேலவை உறுப்பினர் பதவி இம்மாத தொடக்கத்தில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)