கோத்தா திங்கி, நவம்பர் 02 (பெர்னாமா) -- சேறு, சகதி உட்பட மாசுபாடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து ஜோகூர் ஆற்றுப் பகுதிகள் ஓரமாக வசிக்கும் பூர்வக்குடி சமூகத்தினரோடு 150- க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை முதல் உடனடி உதவியைக் கோரி வருகின்றனர்.
கோத்தா திங்கியில் உள்ள கடற்கரை மணல் பகுதியில் சேறு, சகதி கலந்ததைத் தொடர்ந்து, காலை 7 மணியளவில் ஆற்று நீர் கலங்கலாகக் காணப்பட்டதாக, சயோங் பினாங் பூர்வக்குடி கிராமத்தின் தலைவர் மஜிட் ஜந்தான் என்பவர் தெரிவித்தார்.
மண் மாசுபாட்டால், பூர்வக்குடி கிராமவாசிகள், தங்களின் அன்றாட தொழிலான மீன்பிடிக்கச் செல்வதற்கு பெரும் சிக்கல்களைச் சந்தித்துள்ளனர்.
அவர்களின் தினசரி வருமானமும் மோசமான அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக மஜிட் ஜந்தான் பெர்னாமாவிடம் கூறினார்.
"பூர்வக்குடி கிராமத் தலைவர் என்ற முறையில் எங்களுக்கு ஆற்றில் மீன்கள் கிடைக்கவில்லை என்பது மிகவும் ஏமாற்றமாக உள்ளது. இம்முறைதான் மிகவும் மோசமாக உள்ளது. இங்கிருந்து செபெராங்கில் உள்ள கம்போங் பினாங் வரை நாங்கள் சென்றுவிட்டோம். மீன்கள் இருக்கின்றன. ஆனால் ஆற்றோரத்தில் மீன்கள் இறந்து கிடக்கின்றன," என்று அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டுள்ள பூர்வக்குடி சமூகத்திற்கு அரசாங்கமும் தொடர்புடைய இதர நிறுவனங்களும் உடனடி உதவியை வழங்கும் என்று அங்குள்ள குடியிருப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)