புத்ராஜெயா, அக்டோபர் 31 (பெர்னாமா) -- 302 நாள்களாக கடந்த ஏழு ஆண்டுகள் நீடித்த முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம், 1எம்.டி.பி-க்கு சொந்தமான, 230 கோடி ரிங்கிட் நிதி மோசடி வழக்கின் இறுதித் தீர்ப்பு கிறிஸ்துமஸ் தினத்திற்கு மறுநாளான டிசம்பர் 26-ஆம் தேதி அளிக்கப்படும்.
தம்மீது சுமத்தப்பட்ட 25 குற்றச்சாட்டுகளில், நான்கு குற்றச்சாட்டுகள், பிரதமர் பதவியைப் பயன்படுத்தி 230 கோடி ரிங்கிட்டை கையூட்டாகப் பெற்றதாகவும், இதர 21 குற்றச்சாட்டுகள் அதே தொகையை உட்படுத்தி, கள்ளப்பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பில், எதிர் தரப்பினர் தங்களின் வாதங்களை இன்னும் நிறைவு செய்யாத நிலையில், தற்போது மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ கொலின் லாரன்ஸ் செக்கேரா, தீர்ப்புக்கான தேதியை இன்று நிர்ணயித்தார்.
நவம்பர் 4-ஆம் தேதி வரை பிரதிவாதிகள் தங்களின் வாதங்களை முன்வைக்கலாம் என்று அவர் அறிவித்திருந்தாலும், டிசம்பர் 26-ஆம் தேதி தீர்ப்பு நிச்சயம் வழங்கப்படும் என்று கூறினார்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர், தமது வாதங்களைத் தொடர்வதாக டத்தோ ஶ்ரீ நஜிப்பின் வழக்கறிஞரான டான் ஶ்ரீ முஹமாட் ஷாஃபி அப்துல்லா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால், பிற அலுவல் காரணத்தினால், அவரின் விண்ணப்பம் நீதிபதியால் நிராகரிக்கப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பில், அரசு தரப்பு நேற்று தனது வாதங்களை நிறைவு செய்த வேளையில், நஜிப்பிற்கு ஆதரவான எதிர்த் தரப்பு குழு இன்று தனது வாதங்களை நிறைவு செய்யத் திட்டமிட்டது.
இருப்பினும், இவ்வழக்கிற்கான அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 4-ஆம் தேதிக்கு நீதிமன்றம் நிர்ணயித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)