கெடா, 21 அக்டோபர் (பெர்னாமா)-- கடந்த மாதம், பூலை நகரம், கம்போங் அசம் ஜாவாவில் ஆடவர் ஒருவருக்கு மிரட்டல் விடுத்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, போலீஸ் உறுப்பினர்கள் இருவர் இன்று பாலிங் அமர்வு நீதிமன்றத்தில் மறுத்தனர்.
நீதிபதி ரோஹைடா ஈசாக் முன்னிலையில் தங்கள் மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 24 வயதுடைய லான்ஸ் கோபரல்ஷாரிஃப் அபு ஹுரைரா அபு பாக்கர் உம், 28 வயதுடைய கான்ஸ்டபிள் முகமது நஷ்ருல் அலிப் அலாவுதீன் உம் அந்த வாக்குமூலத்தை அளித்தனர்.
கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி கம்போங் அசம் ஜாவா, ஜாலான் பரிட் பன்ஜாங் சாலை அருகே பாதிக்கப்பட்டவரிடம் 200 ரிங்கிட் பணத்தைக் கேட்டு மிரட்டியதாக அவ்விருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஏழாண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது பிரம்படி விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 385-இன் கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்ட வேளையில் அதேச் சட்டம் செக்ஷன் 34-உடன் வாசிக்கப்பட்டது.
அவ்விரையும் தலா 3,000 ரிங்கிட் ஜாமின் தொகையுடன் தனிநபர் ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்க நீதிபதி அனுமதி அளித்தார். இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு வரும் நவம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
32 வயதுடைய ஆடவர் ஒருவரை மிரட்டிய வழக்கின் விசாரணைக்கு உதவும் பொருட்டு பாளிங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் பணிபுரியும் போலீஸ் உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
பாதிக்கப்பட்ட அவ்வாடவர் பின்னர் மாரடைப்பால் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)