ஈப்போ, ஜனவரி 28 (பெர்னாமா) -- தைப்பூசத்தை முன்னிட்டு இம்மாதம் 31 தொடங்கி பிப்ரவரி மூன்றாம் தேதி வரை ஈப்போவைச் சுற்றியுள்ள பத்து சாலைகள் மூடப்பட்டு அதற்கான மாற்றுப் பாதைகள் கட்டம் கட்டமாக திறந்துவிடப்படும்
புந்தோங், சுங்கை பாரியில் உள்ள ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் புறப்பட்டு, குனோங் செரோவில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தை சென்றடையும் இரத ஊர்வலம் மற்றும் அதே வழியில் திரும்பும் முறை ஆகியவற்றுக்காக நான்கு நாள்களுக்கு சாலைகள் மூடப்படுவதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் சைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்தார்.
ஜனவரி 31-ஆம் தேதி காலை மணி 6 முதல் நண்பகல் 12-க்குள் புந்தோங்கில் உள்ள சுங்கை பாரி ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்திலிருந்து, குனோங் செரோவில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு ரத ஊர்வலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தைப்பூசத்திற்குப் பின்னர் பிப்ரவரி 3ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கு குனோங் செரோ ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திலிருந்து புந்தோங் சுங்கை பாரி ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்திற்கு திரும்பும் இரதம் நள்ளிரவு மணி 12-க்கு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஏசிபி அபாங் சைனால் அபிடின் தெரிவித்தார்.
சில முதன்மை சாலைகள் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, பொதுமக்களின் வசதிக்காக திறந்துவிடப்பட்டிருக்கும் மாற்று சாலைகளான ஜாலான் கோலா கங்சார், ஜாலான் துன் அப்துல் ரசாக், ஜாலான் சுல்தான் நஸ்ரின் ஷா, ஜாலான் ராஜா டிஹிலிர், ஜாலான் சி.எம்.யூசோஃப், ஜாலான் யாங் கல்சோம், ஜாலான் சுல்தான் அப்துல் ஜாலில் ஆகிய எட்டு வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இம்முறை பேராக் மாநில தைப்பூசத்தில் சுமார் ஐந்து லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும், வேளையில் நெரிசலை குறைக்க பயணத்தை திட்டமிடுவதோடு மாற்று வழிகளைப் பயன்படுத்தவும் பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)