புத்ராஜெயா, ஜனவரி 28 (பெர்னாமா) -- சாலைத் தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் சாலைப் போக்குவரத்துத் துறை ஜேபிஜே ஒரு புதிய அணுகுமுறைக்கு மாற வேண்டும்.
தானியங்கி எண் பட்டை அங்கீகாரம் ஏ.என்.பி.ஆர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமலாக்க ஆற்றலை மேம்படுத்தவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் இந்நடவடிக்கை அவசியம் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
முன்னர் அமல்படுத்தப்பட்ட சாலை தடுப்பு நடவடிக்கை முறை போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.
எனவே, தரவு ஒருங்கிணைப்பு மற்றும் ஏ.என்.பி. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் அடிப்படையிலான அணுகுமுறையுடன் சாலைத் தடுப்பு நடவடிக்கையைச் செயல்படுத்தாமலேயே வாகன பாரிசோதனையை மேற்கொள்ள முடியும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
''மக்கள் டோல் சாவடிக்குள் நுழைந்த பிறகு ஜே.பி.ஜே சாலைத் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதை நான் பார்க்க விரும்பவில்லை. ஆறு வழிதடங்கள் ஒரு வழிதடமாக மாறும். மக்கள் கோபமாக உள்ளனர். இது ஒரு பழைய அணுகுமுறை. எனவே, ஜே.பி.ஜே மாற வேண்டும். நாம் புத்திசாலித்தனமான விவேகமான முறைகளைப் பயன்படுத்துகிறோம். ஒரு இரவில் ஒரு சாலைத் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதால் எத்தனை வாகனங்களை நாம் பரிசோதிக்க முடியும்'', என்றார் அந்தோணி லோக்.
இன்று புதன்கிழமை புத்ராஜெயாவில் நடைபெற்ற போக்குவரத்து அமைச்சின் 2026 புத்தாண்டு உரையில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)