ஈப்போ, 18 அக்டோபர் (பெர்னாமா) -- அண்மையில், தஞ்ஜோங் மாலிம் அருகே உள்ள லியாங் மலைப் பகுதியில் மலையேறும் நடவடிக்கையை மேற்கொண்டப் பின்னர், Hypothermia எனப்படும் தாழ்வெப்பநிலையால் முஸ்தாக்கிம் மன்சோர் எனும் மலையேறி உயிரிழந்தார்.
நேற்று மாலை மணி 5.35-க்கு உயிரிழந்தவரின் மனைவி மற்றும் சகோதரர் அவரை அடையாளம் கண்டதை அடுத்து, சிலிம் ரிவர் மருத்துவமனையின் தடயவியல் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை மூலம் இது உறுதி செய்யப்பட்டதாக முவாலிம் மாவட்ட போலீஸ் தலைவர் டி.எஸ்.பி சுஹாய்மி முஹமட் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி பகாங், புக்கிட் ஃபிரேசரில் இருந்து லியாங் மலைக்கு தமது 10 நண்பர்களுடன் Trans Slim எனும் மலையேறும் பயணத்தில் ஈடுபட்டிருந்தபோது, 34 வயதான முஸ்தாக்கிம் காணாமல் போனதாக தங்கள் தரப்பு புகார் பெற்றதை சுஹாய்மி உறுதிப்படுத்தினார்.
அக்டோபர் 16-ஆம் தேதி பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 43 உறுப்பினர்களால் தேடல் மற்றும் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டதாகவும், அதே நாள் மாலை மணி 3.30-க்கு லியாங் மலையின் மேற்கு சிகரத்தில் முஸ்தாக்கிம் இறந்து கிடக்கக் காணப்பட்டதாகவும் அவர் விவரித்தார்.
நேற்று பிற்பகல் மணி 2.45-க்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் சிறப்பு விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி, 1,933 மீட்டர் மலை சிகரத்திலிருந்து பாதிக்கப்பட்டவரின் உடல் மீட்கப்பட்டது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]