சிப்பாங், 28 செப்டம்பர் (பெர்னாமா) -- இணையம் வழி, நாட்டில் சியோனிஸ் (Zionis) பிரச்சாரம் ஊடுருவாமல் இருப்பதை உறுதி செய்ய, எம்.சி.எம்.சி உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தரப்பினரால், பரப்பப்படும் எந்தவொரு போலி அல்லது குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கத்தையும் தடுப்பதற்கு சமூக ஊடக தள வழிமுறைகளை எம்.சி.எம்.சி தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
இதுபோன்ற எவ்வித உள்ளடக்கத்திலும் சமரசம் செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில், அரசாங்கம் சமூக ஊடக நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் டத்தோ ஃபஹ்மி கூறினார்.
''இந்த செயல்திறன் மிக்க ஈடுபாடு மற்றும் இத்தளங்களின் விளைவாக, இது ஒரு சமிக்ஞையை அனுப்புகிறது என்று நாங்கள் நம்புகிறோம். அவற்றுடன் சியோனிச பிரச்சாரங்கள் நாட்டிற்குள் நுழைவதையும் தடுப்போம்,'' என்றார் அவர்.
இன்று, சிப்பாங்கில், சுமுட் நுசந்தாரா நடவடிக்கை மையத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அமெரிக்காவில், டிக்டோக் உள்ளடக்க மேலாளராக இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் முன்னாள் பயிற்சியாளரை நியமித்ததை, டிக்டோக் நிறுவனத்துடன் நடத்தப்பட்ட தொடர் சந்திப்புகளில் மலேசியா கடுமையாகக் கண்டித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]