பிரிக்பீல்ட்ஸ், 11 அக்டோபர் (பெர்னாமா) -- நேற்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த 2026 வரவு செலவுத் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
குறிப்பாக இன அடிப்படையில் இன்றி தேவைகளின் அடிப்படையில் பிரதமர் தாக்கல் செய்த 47 ஆயிரம் கோடி ரிங்கிட் மதிப்பிலான வரவு செலவுத் திட்டத்தை இந்திய சமூகத்தினரும் வரவேற்றனர்.அது குறித்து பெர்னாமா செய்திகள் மேற்கொண்ட கண்ணோட்டதில் மக்கள் தங்களின் மனநிறைவை நம்முடன் பகிர்ந்து கொண்டனர்.
மக்களின் தேவைகளை முன்னிறுத்தி மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், வர்த்தகம், வேலை வாய்ப்பு போன்ற முக்கியத் துறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி 2026 வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் தாக்கல் செய்துள்ளதைப் பொது மக்கள் வரவேற்றனர்.
"மாணவர்கள் திறமை உடையவர்களாக இருந்தாலும், பொருளாதார தடைகள் காரணமாகக் கல்வியைத் தொடர முடியாமல் சிரமப்படுகின்றனர். இவ்வரவு செலவுத் திட்டத்தின் அறிவிப்புகள் என் குடும்பத்தினருக்கும் எனக்கும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்துகின்றது. நம் மாணவர்கள் இதனைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்," என்றார் ராமகிருஷ்ணா சுப்ரமணியம்.
மேலும், "பிரதமர் நிகழ்த்திய உரை எங்களுக்குத் திருப்தியை அளிக்கிறது. வரவுசெலவுத் திட்டத்தைக் கேட்டவுடன் மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர் இனிமேலும் மக்களின் நலனுக்காகப் பல நன்மைகள் செய்வார் என எதிர்பார்க்கின்றோம்," என்று பொது மக்களில் ஒருவர் கூறினார்.
"ரஹ்மா 100 ரிங்கேட் உதவித் தொகை என்னை போல் சிறு அல்லது பெறு தொழில் செய்பவர்களுக்குப் பெரும் உதவியாக உள்ளது. இது மக்கள் பொருள்களை வாங்கும் பொழுது வணிகத்தின் பணப்புழக்கமும் அதிகரிக்கும்,''. என்றார் வியாபாரி லிங்கம் ராமசந்திரன்
2026 வரவு செலவுத் திட்டம் மக்களின் சமூக நலனைக் கருத்தில் கொண்டு வரையப்பட்டுள்ளதால் இது மக்களிடையே நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி (ஆஸ்ட்ரோ 502)