வாஷிங்டன், 02 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப் போவதில்லை என்று இந்தியா முடிவெடுத்திருப்பது குறித்து தாம் கேட்டறிந்ததாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் இந்நடவடிக்கை சரியான முடிவு என்று அவர் கூறியுள்ளார்.
''இந்தியா இனி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கப் போவதில்லை என்பதை நான் கண்டறிந்தேன். அப்படித்தான் நான் கேள்விப்பட்டேன். அது சரியா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது ஒரு நல்ல படி. என்ன ஏற்படுகிறது என்று பார்ப்போம்,'' என்றார் அவர்.
அமெரிக்காவின் புதிய தடைகளைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்குச் சென்ற ரஷ்யாவின் எண்ணெய் கொள்கலனை ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் வேறு இடங்களுக்குத் திருப்பி விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஈரானுடன் தொடர்புடைய 115க்கும் மேற்பட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் மீது அமெரிக்க கருவூலத் துறை இவ்வாரம் தடைகளை விதித்தது.
அவற்றில் சில தரப்புகள் ரஷ்ய எண்ணெயைக் கொண்டு செல்வதில் ஈடுபட்டுள்ளன.
உக்ரேனுடன் சமாதான ஒப்பந்தத்திற்கு ரஷ்யா ஒப்புக் கொள்ளாவிட்டால், 100 விழுக்காட்டு வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
மேலும், மாஸ்கோவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறும் அவர் உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)