பந்திங், ஜனவரி 14 (பெர்னாமா) -- தித்திக்கும் கரும்புகளை இல்லங்கள் தோறும் கட்டி வைத்து கொண்டாடும் பாரம்பரியம், இன்றளவும் பொங்கல் பண்டிகையின் அடையாளமாக விளங்குகிறது.
அந்த சுவையான மற்றும் தரமான கரும்புகளை மக்களிடம் கொண்டுச் சேர்ப்பதற்கு, மாதக் கணக்கில் வியர்வை சிந்தி, அறுவடை செய்யும் விவசாயிகளின் உழைப்பு விலைமதிப்பற்றதாகும்.
அந்த வகையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, சிலாங்கூர், பந்திங்கில் கரும்பு விவசாயத்தில் ஈடுபட்டு வரும் கஸ்தூரி கண்ணாவிடம் பெர்னாமா செய்திகள் சிறப்பு நேர்காணல் மேற்கொண்டது.
ஜனவரியில் கொண்டாடப்படும் பொங்கலுக்கு பயன்படுத்தப்படும் கரும்புகளின் விளைச்சல் செயல்முறை, சுமார் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிடும்.
அதன் பின்னர், பொங்கல் பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக அதற்கான அறுவடைகள் தொடங்கிவிடும் என்று கடந்த ஆறு ஆண்டுகளாக கரும்பு விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் கஸ்தூரி கண்ணா தெரிவித்தார்.
நான்கு ஹெக்டர் நிலப்பரப்பில் செங்கரும்பு மற்றும் மஞ்சள் நிறக் கரும்புகளை நட்டு, கஸ்தூரி விவசாயம் செய்து வருகிறார்.
பொங்கல் காலக்கட்டத்தில் சிலாங்கூர் உட்பட வெளி மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகளுக்கு கரும்புகள் மொத்தமாக விற்கப்படுகின்றன.
இதனிடையே, தமது தோட்டத்தில் உள்ள கரும்புகள் குளிர்பானத்திற்காகவும் விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
எனினும், குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு குளிர்பானத்திற்கான விற்பனைகளும் அறுவடைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று கஸ்தூரி விளக்கினார்.
நம்பவர் மற்றும் டிசம்பர் மாதம் கரும்பு விளைச்சலுக்கு சவால் நிறைந்த காலக்கட்டம் என்று கஸ்தூரி குறிப்பிட்டார்.
அந்தக் காலக்கட்டத்தில் ஏற்படும் வெள்ளத்தால் கரும்புகள் பாதிக்கப்படுவதோடு, பொங்கலுக்கான கரும்பு விநியோகிப்பிலும் சுணக்கம் ஏற்படும் என்று அவர் கூறினார்.
விவசாயம் சவால் நிறைந்ததாக இருந்தாலும் பண்டிகை காலக்கட்டத்தில் கலாச்சாரம் பின்பற்றப்படுவதற்கு தமது தோட்டத் தொழிலும் ஒரு காரணமாக இருப்பதை நினைத்து பெருமைக் கொள்வதாக கஸ்தூரி தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)