கோலாலம்பூர், 01 ஆகஸ்ட் (பெர்னாமா) - பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்திருந்த ஐந்தாண்டுத் திட்டமான 13ஆவது மலேசியத் திட்டம் மலேசியர்களின் வளமான எதிர்காலத்திற்கு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
மக்களின் வாழ்வாதார வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள கூடுதல் நலத் திட்டங்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவர்களை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்று தாம் நம்புவதாக மலேசிய கிளந்தான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் பாலகிருஷ்ணன் பரசுராமன் தெரிவித்தார்.
இளைஞர்களிடையே காணப்படும் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் களைவதற்காக அரசாங்கம் இம்முறை தொழிற்கல்வி மற்றும் தொழில் பயிற்சி,
டிவெட்டிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்திருப்பது வரவேற்கக்கூடியது என்று முனைவர் பாலகிருஷ்ணன் கூறினார்.
"உதாரணத்திற்கு குளிரூட்டி பழுது பார்ப்பு துறையில் ஒரு மாணவர் பயில்கிறார் என்றால் அவரிடம் சான்றிதழ் இருந்தால் கூட பல நிறுவனங்கள் அவரை வேலைக்கு எடுக்க தயாராக இருக்கின்ற. பின்னர் தனது கல்வித் தகுதியையும் அம்மாணவரால் படிப்படியாக உயர்த்திக் கொள்ள முடியும். எனவே தொழில்துறை கல்வியை பிள்ளைகளை ஊக்குவிக்க பெற்றோர் முனைப்புக் காட்ட வேண்டும்," என்று அவர் கூறினார்.
கணினி மயமாக்கல் அடிப்படையில், உலகம் இயங்கிக் கொண்டிருந்த வேளையில், தற்போது செயற்கை நுண்ணறிவு AI பற்றி மக்கள் விரிவாக தெரிந்து கொள்ளவும் அன்றாட வாழ்வில் அதை முழுமையாகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அவர் விவரித்தார்.
"முன்பெல்லா நிறைய வேலைகளை தொழில்நுட்ப வசதியின்றி சுயமாகவே நாம் செய்வோம். ஆனால் இப்போது அனைத்து வேலைகளிலும் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் மிகுதியாக இருப்பதால் அது அந்த வேலைகளை இன்னும் சுலபமாக்குகிறது," என்றார் அவர்.
அதேவேளையில், பொருளாதார ரீதியிலான அறிவிப்புகளின் வழி, குறு, சிறு, நடுத்தர இந்திய வணிகர்களும் அதில் பயன்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாக முனைவர் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
இதனிடையே, குறைந்தபட்ச ஊதிய விகிதமான 1,700 ரிங்கிட், இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், இதைத் தொடர்ந்து தொழிலாளர்களுக்குப் போதுமான ஊதியங்கள் கிடைப்பதற்கான மேலும் சில வியூகங்களையும் அரசாங்கம் இப்போது தொடங்கி வகுத்து வருவதாக அவர் கூறினார்.
கல்வி, பொருளாதரம், சுகாதாரம், பொது வசதி, சமூகவியல் என்று மக்களின் நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் அளித்து இம்முறை பெரிய அளவில் தொகை ஒதுக்கப்பட்டுள்ள 13-வது மலேசியத் திட்டம் தாக்கல் தொடர்பில் பெர்னாமா செய்திகள் தொடர்பு கொண்டபோது முனைவர் பாலகிருஷ்ணன் அதனைக் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)