Ad Banner
 

நவீனத்தை வென்று பாரம்பரியம் காக்கும் மண்பானை குலத்தொழில்

12/01/2026 06:50 PM

கோலா சிலாங்கூர், 12 ஜனவரி (பெர்னாமா) -- விவசாயம் தளைக்க சூரியனுக்கும், விளைச்சலுக்கு துணை நிற்கும் கால் நடைகளுக்கும் நன்றி கூறும் வகையில், புத்தரிசி, சா்க்கரை, பால், நெய் சோ்த்து புதுப் பானையில் பொங்கல் வைத்து விமரிசையைாக கொண்டாடுவது தமிழா் மரபு.

பொங்கல் திருநாளுக்கு இன்னும் சில நாள்களே எஞ்சியுள்ள நிலையில், பொங்கல் வைக்க தேவையான புதுபானைகளை தயாரித்து விற்பனை செய்யும் பணிகளில் வியாபாரிகள் ஆயத்தமாகிவிட்டனர்.

மண்பாண்டத் தொழில் நலிவடைந்து வந்தாலும், பொங்கல் திருநாளைக் 
கொண்டாட,  மண் மணம் மாறாமல் மக்கள் இன்னமும் மண்பானைகளையே தேடி வருகின்றனர்.

கோலா சிலாங்கூரில், கே.எஸ் போட்டரி நிறுவனம் வழியாக, 38 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தொழிலில் பாரம்பரியமாக அனுபவம் பெற்றிருக்கும் ஆறுமுகம் பெருமாள் குடும்பத்தார், தரம், வடிவம், அழகு மட்டுமின்றி, தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஒருபோதும் தவறியதில்லை.

தாத்தா, தந்தை வழி கற்றுக்கொண்ட இக்கைத்தொழில், தொடக்கத்தில் பாரம்பரிய முறையில், அதிகமான கை வேலைப்பாடுகளோடு இருந்ததாகவும், பின்னர் கால மாற்றத்திற்கேற்ப நவீன இயந்திரங்கள் இதில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும ஆறுமுகம் கூறினார். 

''செம்மண் குழைக்கும் இடத்தில் தற்காலிகமாக வேலை செய்து கொண்டிருந்த நான் அங்குள்ள சிரமம் தாங்காமல், நமக்கென்று குடும்பத் தொழில் இருக்கும் போது நாம் ஏன் அதை தொடர்ந்து செய்யக் கூடாது என்ற எண்ணம் என்னுள் தோன்றியது. என் தந்தைக்கு பிறகு இத்தொழிலை தொடங்கிய நான் சிறுது காலம் கையால் மட்டுமே பானைகளை தயார் செய்து வந்தேன். நாளடைவில், பூச்சாடிகள் உருவாக்குவதற்கு பயன்படுத்தும் அச்சை நாம் ஏன் மண் பானைகள் செய்வதற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ள கூடாது என்ற முயற்சியில் இறங்கினேன். அதன் மூலம் இத்தொழிலுக்கு பல இயந்திர வசதிகளையும் கொண்டு வந்தேன்,'' என ஆறுமுகம் பெருமாள் கூறினார்.

வீடுகளில் பாரம்பரிய முறையில் பொங்கல் வைக்க விறகு அடுப்பை தயார் செய்ய பெரும்பாலானோர் செங்கல், தகரம், மரக்கட்டைகள் போன்றவற்றை தேடுவதில் சிரமப்படுகின்றனர். 

குறிப்பாக, அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்போர் இச்சிக்கலை எதிர்கொள்ளும் நிலையில், அதனைக் களைய பிரத்தியேகமான அடுப்பை தமது நிறுவனம் தயாரித்துள்ளதாகவும் ஆறுமுகம் தெரிவித்தார். 

இதனிடையே,  மூன்றாவது தலைமுறையாக ஆறுமுகத்திற்குப் பிறகு, இப்பரம்பரைத் தொழிலை அவரின் மகனான, கே.எஸ் போட்டரி நிறுவன இயக்குநர் ஆனந்த் ஆறுமுகம், கடந்த சில ஆண்டுகளாகப்  புதிய கோணத்தில் சிறப்புற வழிநடத்தி வருகிறார். 

''இணையம் இல்லாத காலக் கட்டத்தில் மண் பானைகள் வாங்குவத்றகு மக்கள் கடைக்கு வருவதையே வழக்கமாக கொண்டிருந்தனர். இந்நிறுவனத்தை மேலும் மக்கள் மத்தியில் கொண்டுச் சேர்க்க நான் புதிய பானைகளை இணையம் வழி சந்தைப்படுத்தினேன். பானைகளை இருக்கும் இடத்திலிருந்த்தே வாங்குவதற்கு இலகுவாக அமைந்த இம்முயற்சி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்ததோடு லாபத்தையும் ஈட்டித் தந்தது,'' என ஆனந்த் ஆறுமுகம் கூறினார். 

பொதுவாக, பானை தயாரிப்பில் செங்கல் சூளையில் பானையை எரிக்கும் போது ஒரு நேரத்திற்கு 400 பானைகள் மட்டுமே எரிக்க முடியும்.

அதிலும் அந்த பானையை சூளையில் அடுக்குவதற்கும், எரிந்த பின்னர் வெளியில் எடுத்து சூட்டை தணிய வைப்பதற்கும் கூடுதல் நேரமும் ஆள்பலமும் தேவைப்படும்.

ஆனால், இப்புதிய வாயு தொழில்நுட்பத்தின் மூலமாக ஒரு நேரத்தில் 1,500-க்கும் மேற்பட்ட பானைகளை எரிக்க முடியும் என்பதோடு நேரமும் வெகுவாகச் சிக்கனப்படுவதைக் அவர் சுட்டிக் காட்டினார். 

மண்பாண்டங்களை வடிவமைப்பது, வெயிலில் உளரவைப்பது, வண்ணம் தீட்டுவது என்று வாடிக்கையாளர்களின் திருப்தியைக் கருத்தில் கொண்டு, தயாரிப்பு பணிகளில் தாம் கவனம் செலுத்தத் தவறியதில்லை என்று ஆனந்த் குறிப்பிட்டார்.

''மண் பாண்டத்தில் ஓட்டை விழாமல் இருப்பதை தவிர்க்க ஃபில்டர் ப்ரைஸ் எனும் இயந்திரத்தை பயன்படுத்துகிறோம். மண்ணை பக்குவப்படுத்தி பானையில் ஓட்டை விழாதவாறு பானைகளை தயார் செய்கிறோம். தரமான மண்ணை மட்டுமே பயன்படுத்துவதால் மண் சட்டிகள் வெடிக்காமல் இருப்பதையும் தவிர்க்க முடிகிறது.  விறகில் எரிப்பதை காட்டிலும் எரிவாயு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எரிக்கப்படும் மண் பாண்டங்களின் தரமும் வேறுபடும். இதனால் மக்களிடம் இந்நிறுவத்தின் நம்பகத்தன்மை அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை,'' என ஆனந்த் ஆறுமுகம் கூறினார். 

அதேவேளையில், சுயமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற முனைப்போடு ஒரு கைத்தொழிலைக் கற்பது, இளைஞர்கள் மத்தியில் தனிமனித வருமானத்தைப் பெருகச் செய்வது, வேலை இல்லா நிலையையும் தவிர்ப்பதாக அவர் தெரிவித்தார். 

''கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் என்னும் கூற்று நாம் அனைவரும் அறிந்தது. சிறிய கைத்தொழிலாக இருந்தாலும் நாளடைவில் அது பெரிய வருமானத்தை கொடுக்கும்,'' என கூறினார்.

இன்று  கால மாற்றத்திற்கேற்ப பொங்கல் வைக்க, வெள்ளிப் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களுக்கு மத்தியில், மண் பானைகளுக்கு மலேசியர்கள் வழங்கும் வற்றாத ஆதரவு குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)