புத்ராஜெயா, 22 மே (பெர்னாமா) -- பாலியல் குற்றங்கள் மற்றும் இணைய சுரண்டலில் இருந்து குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, இணையப் பாதுகாப்புச் சட்டம், ONSA-வின் கீழ் சட்டத் திருத்தங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
சிறார்களை உட்படுத்திய இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து அதிகரித்து வரும் அச்சத்தினால், அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிரான வழக்குத் தொடரும் நடைமுறைகள் உட்பட, சட்டத் திருத்தங்களின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்வதற்காக தமது அமைச்சு, தற்போது சில அமைச்சுகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் நேன்சி கூறினார்.
இலக்கவியல் சூழலில் குழந்தைகளுக்கு மேலும் விரிவான பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இச்சட்டத் திருத்தம் அவசியமானது.
''2025-ஆம் ஆண்டின் கீழ் குழந்தைகளுக்கான சிறப்பு இணையத் திட்டம் தொடர்பாக எங்களிடம் உள்ள சட்ட மசோதாவில் ஒரு திருத்தம் செய்யப்பட உள்ளது,'' என்றார் அவர்.
இன்று, புத்ராஜெயாவில், சிறார்களின் பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சியை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நேன்சி அவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே, 2025-ஆம் ஆண்டு இணைய பாதுகாப்புச் சட்டம், ONSA-வின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு புதிய விதிமுறைகளான, குழந்தை பாதுகாப்பு விதிமுறை மற்றும் இடர் குறைப்பு விதிமுறை, ஜூன் முதலாம் தேதி அமலுக்கு வரும்.
குழந்தைகள் பாதுகாப்பை வலுப்படுத்துவதும், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இலக்கவியல் தளங்களைக் கட்டாயப்படுத்துவதே, அமலாக்கத்தின் நோக்கமாகும்.
கடந்த பிப்ரவரி 12 முதல் மார்ச் 31-ஆம் தேதி வரையில் நடைபெற்ற, தொழில்துறை, மக்கள் சமூக அமைப்புகள் மற்றும் பங்குதாரர்களுடனான கலந்தாலோசிப்பு அமர்வுகள் மற்றும் பொது ஆலோசனைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து, அவ்விரு விதிமுறைகளும் உருவாக்கப்பட்டதாக, எம்.சி.எம்.சி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]