Ad Banner
Ad Banner
 பொது

எரிசக்தி செலவுகள் அதிகரித்தாலும் 85% பயனர்கள் பாதிப்படைய மாட்டார்கள்

22/05/2026 04:17 PM

புத்ராஜெயா, 22 மே (பெர்னாமா) -- உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்த போதிலும், மணிக்கு 600 கிலோவாட்டிற்குக் கீழ் மின்சாரத்தைப் பயன்படுத்தும் சுமார் 85 விழுக்காட்டு பயனீட்டாளர்கள் பாதிப்படைய மாட்டார்கள் என்று அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.  

இதன் மூலம் ஏற்படும் சுமையை மக்கள் எதிர்நோக்காமல் இருப்பதை உறுதிச் செய்வதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக, துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப் கூறினார்.

மணிக்கு 600 கிலோவாட்டுக்கும் அதிகமான மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்களுக்காக சற்று சீரமைப்பு மேற்கொள்ளப்படும்.

ஆனால், அது சிரமமானது அல்ல என்று, இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சின் மாதந்திரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா செய்தியாளர்களிடம் கூறினார்.  

"எனவே, தளவாடங்கள் பாதிக்கப்படும்போது, அனைத்தின் விலையும் உயர்ந்துவிடும். அதாவது, அந்தப் பொருள் அனைத்து பொருட்களின் விலையையும் அதிகரிக்கும். ஆனால் மின்சார விலை (பொருத்தவரை), 85 விழுக்காட்டு மக்கள் பாதிப்படைய மாட்டார்கள் என்று நாங்கள் உறுதியளித்து விட்டோம். எனவேதான், அதற்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கின்றது. எனவே, அதை அப்படியே நிலைநிறுத்துவோம். ஒருவேளை அது அதிகரிக்கலாம். வேறு சில தொழில்துறைகளும் இருக்கலாம், மற்ற துறைகளில் சிறிய தாக்கம் ஏற்படலாம். ஆனால், ஒட்டுமொத்த நிலவரம் என்னவென்பதை நாங்கள் மதிப்பிட்டு வருகிறோம்," என்றார் அவர். 

நீண்ட காலத்திற்கு மின்சாரக் கட்டணச் சுமையைக் குறைக்கும் ஓர் ஆக்கப்பூர்வ நடவடிக்கையாக, 15 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டில் நிலையான தள்ளுபடி மற்றும் SuRIA எனப்படும் ஊக்க தொகை வீட்டுத் திட்ட முன்னெடுப்பை அமைச்சு தொடங்கியுள்ளதாக அவர் கூறினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]