சிரம்பான், 22 மே (பெர்னாமா) -- மாநிலத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக, ஜோகூர் மாநில சட்டமன்றத்தைக் கலைப்பது மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் முழு உரிமையாகும்.
மாநிலத் தேர்தலுக்கான சரியான நேரம் குறித்து ஜோகூர் சுல்தானாக உள்ள சுல்தான் இப்ராஹிமுக்கு ஜோகூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் கசி ஆலோசனை வழங்குவார் என்று தேசிய முன்னணி துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் நம்பிக்கை தெரிவித்தார்.
''அது (சட்டமன்றத்தைக் கலைப்பது) விரைவில் நடக்கலாம், அல்லது தாமதமாகவும் நடக்கலாம். அது அவரின் (மந்திரி புசார்) விருப்புரிமையைப் பொறுத்தது. ஆனால் அரசியல் ரீதியாக, தலைமையக அளவிலோ அல்லது மத்திய அளவிலோ இதுவரை எதுவும் விவாதிக்கப்படவில்லை,'' என்றார் அவர்.
இன்று, ஶ்ரீ செண்டாயான் தேசிய இடைநிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஓட்டப்பந்தய போட்டியை தொடக்கி வைத்தப் பின்னர் முஹமட் ஹசான் செய்தியாளர்களிடம் பேசினார்.
கடந்த மே 16-ஆம் தேதி, ஜோகூர் மாநில தேசிய முன்னணி தலைவரான ஓன் ஹஃபிஸ், எதிர்வரும் மாநிலத் தேர்தலில் 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேசிய முன்னணி போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார்.
2022-ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலில், தேசிய முன்னணி 40 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில், நம்பிக்கை கூட்டணி 12 தொகுதிகளிலும், பெரிக்காத்தான் நேஷனல் மூன்று தொகுதிகளிலும், மூடா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]