கோலாலம்பூர், மே 21 (பெர்னாமா) -- கோலாலம்பூர் கம்போங் காசிப்பிள்ளை ருக்குன் தெத்தாங்கா அமைப்பின் செயலாளராகப் பணியாற்றிய கார்த்தி பழனிசாமி அண்மையில் காலமான நிலையில், இன்று அவரின் குடும்பத்தினரைத் தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் நேரில் சந்தித்து தமது இரங்கலைத் தெரிவித்தார்.
1975- ஆம் ஆண்டு, மலேசியாவின் முதல் ருக்குன் தெத்தாங்கா பகுதி கம்போங் காசிப்பிள்ளையில் உருவாக்கப்பட்டபோது, அதன் முதல் செயலாளராகக் கார்த்தியின் தந்தையின் மறைந்த பழனிசாமி பணியாற்றியிருந்தார்.
மறைந்த பழனிசாமியும் அவரது மகன் கார்த்தி பழனிசாமியும் சமூக ஒற்றுமை, அண்டை அயலார் நல்லிணக்கம் மற்றும் மக்கள் ஒன்றுபட்ட வாழ்வை முன்னெடுக்க முக்கிய பங்காற்றியுள்ளனர். அவர்களின் சேவை சமூகத்தால் என்றும் நினைவுகூரப்படும் என்று துணையமைச்சர் கூறினார்.
தனது இறுதி காலம் வரை கார்த்தி பழனிசாமி, கம்போங் காசிப்பிள்ளை ருக்குன் தெத்தாங்கா செயலாளராகப் பொறுப்பேற்று, தனது தந்தை தொடங்கிய சேவையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றதாக யுனேஸ்வரன் தெரிவித்தார்.
இன்று கம்போங் காசிப்பிள்ளை, மலேசியாவில் ருக்குன் தெத்தாங்கா இயக்கம் தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக திகழ்கிறது. பின்னர் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு துறையின் கீழ் விரிவடைந்த இந்த அமைப்பு, நாட்டின் நல்லிணக்கத்திற்கு வலுவான அடித்தளமாக அமைந்தது என்று அவர் கூறினார்.
மேலும், ஆரம்பக் கால சமூக ஒற்றுமைக்கு உழைத்தவர்களின் சேவையை நினைவுகூர்வது மிகவும் முக்கியமானது என்றும், அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு தொடர்ந்து மரியாதை அளித்து வருவதாகவும் யுனேஸ்வரன் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)