Ad Banner
Ad Banner
 பொது

பெண்களின் முழு உடல்நலப் பிரச்சனை; பி.எம்.ஓ.எஸ்-ஆக மாற்றம் கண்ட பி.சி.ஓ.எஸ்

21/05/2026 04:19 PM

கோலாலம்பூர், 21 மே (பெர்னாமா) -- பி.சி.ஓ.எஸ் (PCOS) எனப்படும் Polycystic Ovary Syndrome, அல்லது Polycystic கருப்பை நோய்க்குறி, தற்போது, பி.எம்.ஓ.எஸ் (PMOS) எனப்படும் Polyendocrine Metabolic Ovarian Syndrome, அல்லது பல அகச்சுரப்பி வளர்சிதை மாற்ற கருப்பை நோய்க்குறி என பெயர் மாற்றம் கண்டுள்ளது. 

14 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட பல்வேறான மருத்துவ ஆய்வுகளுக்குப் பின்னர் உருவான இப்பெயர் மாற்றம், பெண்களின் முழுமையான உடல்நலப் பிரச்சனைகளை வெளிப்படுத்தும் முக்கிய மருத்துவ முன்னேற்றமாகவும் பார்க்கப்படுவதாக, மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மூத்த ஆலோசகர் டத்தோ டாக்டர் ரிஷா மாணிக்கம் கூறினார். 

முன்னதாக பி.சி.ஓ.எஸ் என்பது கருப்பை மற்றும் hormone எனப்படும் இரத்த நாளத்தில் உள்ள உட்சுரப்பி சீர்கேடு தொடர்பான பிரச்சனையாகவே கருதப்பட்டதாக டத்தோ டாக்டர் ரிஷா மாணிக்கம் விவரித்தார். 

ஆனால், இந்நோய் இனப்பெருக்க பிரச்சனையை மட்டும் குறிக்கவில்லை என்பதும், உடலின் metabolism எனப்படும் வளர்சிதை மாற்றம் அல்லது மாற்றுச் சத்து செயல்பாடுகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதும், அண்மைய மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெளிவுபடுத்தினார். 

''உடல் பருமன், முகப்பருக்கள், முகத்தில் அதிகமான உரோமம், கருத்தரித்தலில் தாமதம், நீரிழிவு, மனவுளைச்சல் போன்ற சிக்கல்கள் நிலவும்போது, இவை அனைத்தும் கருப்பையுடன் மட்டுமே தொடர்புள்ளவையா என்று சிந்தித்து, கடந்த 14 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம், இச்சிக்கல் உடலில் இருக்கக்கூடிய மெட்டபோலிக் அல்லது வளர்சிதை மாற்றத்தால் உண்டாகும் பிரச்சனை என்று தெரியவந்துள்ளது,'' என்றார் அவர்.

இதன் காரணமாகவே தற்போது பி.சி.ஓ.எஸ் என்பதற்கு பதிலாக பி.எம்.ஓ.எஸ் என்ற பெயர் பயன்படுத்தப்படுவதாக டாக்டர் ரிஷா கூறினார்.  

இந்நிலையில், குறிப்பிட்ட, அதாவது கருப்பை பிரச்சனையாக மட்டும் இதனை பார்க்காமல், பெண்களின் முழு உடலில் ஏற்படும் சிக்கலாக இருப்பதால் அனைத்துப் பிரிவு மருத்துவர்களாலும் சிகிச்சையளிக்கப்படும் என்று அவர் மேலும் விளக்கினார். 

''முழு உடலையும் பாதிப்பதால் தாமதமான சிகிச்சையாக இருக்கக்கூடாது. அடுத்து, இது தொடர்பிலான விழிப்புணர்வை அனைவரிடத்திலும் ஏற்படுத்த வேண்டும். அதோடு, அனைத்து மருத்துவர்களும் சேர்ந்து இதனைக் கண்டறிந்து விரைவான சிகிச்சையளித்தால், இதற்கான தீர்வை காணலாம்,'' என்றார் அவர்.

இதன் மூலம், பெண்களின் முழுமையான உடல்நலத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதாக டாக்டர் ரிஷா குறிப்பிட்டார். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]