கோலாலம்பூர், மே 13 (பெர்னாமா) -- MV HONDIUS சொகுசுக் கப்பலில் பதிவான ஹன்டா நச்சுயிரி தொடர்பாக அனைத்துலக அளவில் வெளியிட்டப்பட்ட அறிக்கைகளைத் தொடர்ந்து, பினாங்கு துறைமுக ஆணையம் எஸ்.பி.பி.பி, Swettenham Pier கப்பல் முனையத்தில் சுகாதாரக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.
மலேசியாவில் இதுவரை ஹன்டா நச்சுயிரி தொடர்பாக எந்தவொரு சம்பவமும் பதிவாகாத போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக எஸ்.பி.பி.பி தலைவர் டத்தோ இயோ சூன் ஹின் தெரிவித்தார்.
இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் கப்பல்களின் தூய்மை பராமரிப்பு மற்றும் முனையத்தில் எலிகளால் பரவும் கிருமிகளைக் கட்டுப்படுத்துவதும் அடங்கும்
மேலும், அனைத்துலக சுகாதார ஒழுங்குமுறைகள் IHR 2005 படி, மலேசிய சுகாதார அமைச்சும் அது தொடர்புடைய பிற அமைப்புகளும் இணைந்து அந்நடவடிக்கையை மேற்கொள்ளவதாக டத்தோ இயோ சூன் ஹின் தெரிவித்தார்.
அதோடு, அந்த சுற்றுலா கப்பல் முனையத்தில், ஏதேனும் அசாதாரண சம்பவங்கள் ஏற்படுகிறதா என்பதை முன்கூட்டியே கண்டறிவதற்காக, தொற்றுநோய் தொடர்பான கண்காணிப்பையும் எஸ்.பி.பி.பி அதிகரித்துள்ளது.
இதனிடையே, சுகாதார நிலைகள் எப்போதும் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, கால்நடை மருத்துவ சேவைகள் மற்றும் ஊராட்சி மன்றங்கள் உடனான ஒத்துழைப்பும் வலுப்படுத்தப்பட்டு வருகிறது.
பயணிகளும் கப்பல் பணியாளர்களும் எலிகள் அல்லது அவற்றின் கழிவுகளினால் பாதிக்கப்படாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மாசடைந்த பகுதிகளை சுத்தம் செய்யும் போது முகக்கவசமும் கையுறைகளும் அணியுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆபத்தான பகுதிகளில் இருந்த பிறகு காய்ச்சல், தசை வலி, இருமல் அல்லது மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)