கோலாலம்பூர் , மே 13 (பெர்னாமா) -- கடந்த மாதம், கோலாலம்பூர் வளாகத்தைச் சுற்றியுள்ள எல்.ஆர்.டி மற்றும் எம்.ஆர்.டி ரயில் நிலையப் பகுதிகளில், ஐந்து பெண்களை பாலியல் ரீதியாக சீண்டிய குற்றத்திற்காக, கட்டுமானத் தொழிலாளி ஒருவருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் 18 மாத சிறைத் தண்டனையும் ஒரு பிரம்படியும் விதித்து தீர்ப்பளித்தது.
எம்டி ரோம்ஜன் அலி எனும் வங்காளதேச ஆடவரான அத்தொழிலாளிக்கு, கடந்த மே 6-ஆம் தேதி, கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆறு மாத சிறைத் தண்டனையும் 14 ஆயிரத்து 500 ரிங்கிட் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருந்தது.
அத்தீர்ப்பை மறுஆய்வு செய்த பின்னர், நீதிபதி டத்தோ அஸ்லாம் சைனுடின் இன்று இத்தண்டனையை வழங்கினார்.
ந்து வழக்குகளுக்கும் நீதிமன்றம் ஒட்டுமொத்தமாக ஒரே தண்டனையை வழங்குவதாக நீதிபதி டத்தோ அஸ்லாம் தெரிவித்தார்.
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக, ஏப்ரல் 27-ஆம் தேதி அவ்வாடவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில், ஒன்றிற்கு பிரம்படியும் விதிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
21 முதல் 28 வயதுக்குட்பட்ட உள்நாட்டுப் பெண்கள் உட்பட ஒரு ஜெர்மனியப் பெண்ணையும் பாலியல் சீண்டல் புரிந்ததாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றத்தினை மே 6-ஆம் தேதி அவ்வாடவர் ஒப்புக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)