ஜோகூர் பாரு , மே 13 (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் இவ்வாண்டு ஏப்ரல் ஆகிய இரு மாதங்களில், இரு வீடுகள் மீது சாயம் ஊற்றிய குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, கார் இழுவையாளராகப் பணிபுரியும் ஆடவர் ஒருவருக்கு எதிராக, ஜோகூர் பாருவில் உள்ள இரண்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள், ஏழு மாத சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தன.
நீதிபதி அஸுரீன் சஹிரா சௌஃபி அஃபாண்டி, குற்றம் சாட்டப்பட்ட 28 வயதுடைய முஹமட் யாக்கோப் இப்ராஹிமிற்கு இன்று மே 13-ஆம் தேதி முதல், மூன்று மாத சிறைத் தண்டனையை வழங்கிய நிலையில்,
அவர் கைது செய்யப்பட்ட ஏப்ரல் 16-ஆம் தேதி தொடங்கி நான்கு மாதத்திற்கு மற்றோர் சிறைத்தண்டனையை மஜிஸ்திரேட் நபில்லா நிசாம் வழங்கி தீர்ப்பளித்தார்.
52 வயதுடைய ஆடவர் ஒருவரின் இல்லத்தின் மீது உள்நோக்கத்துடன் சிவப்பு சாயத்தை ஊற்றியதுடன், சேதம் மற்றும் இழப்பை ஏற்படுத்தியதாக நீதிபதி அசூரின் ஷஹிரா முன்னிலையில் முஹமட் யாக்கோப் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஜாலான் முத்தியாரா எமாஸ் தாமான் மவுண்ட் அவுஸ்தின் என்ற முகவரியில் உள்ள வீட்டில், கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி மாலை மணி 4.10-க்கு அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக கூறப்பட்டது.
அதையடுத்து, 37 வயதுடைய மற்றொரு நபரின் வீட்டிலும் சிவப்பு வண்ண சாயத்தை ஊற்றி, அவருக்கு இழப்பையும் சேதத்தையும் ஏற்படுத்திய குற்றமும் முஹமட் யாக்கோப் மீது வாசிக்கப்பட்டது.
கடந்தாண்டு டிசம்பர் 24ஆம் தேதி காலை மணி ஏழு அளவில், டுவின் டங்கா ரெசிடன்சி, ஜாலான் தெங்கா, கம்போங் சுங்கை டங்கா என்ற முகவரியில் உள்ள குடியிருப்பில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக கூறப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்தாண்டுகளுக்கும் மேற்போகாத சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும், குற்றவியல் சட்டம் செக்ஷன் 426-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)