கோலாலம்பூர், மே 10 (பெர்னாமா) -- மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவு மித்ராவில் அண்மைய காலமாக இந்திய சமூகத்தினர் பெற்று வரும் அனுகூலங்களுடன் கல்வியிலும் வர்த்தகத்திலும் அவர்கள் எட்டியிருக்கும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பிரதமரின் இன்றைய அறிவிப்பு அமைந்துள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் இராமகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.
மித்ராவின் செயல்பாட்டிற்காக பிரதமர் அறிவித்திருக்கும் இந்த கூடுதல் ஐந்து கோடி ரிங்கிட் பல வணிகர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கட்டமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
"இந்த கூடுதல் நிதி ஒதுக்கீட்டிற்காகப் பிரதமருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, அது செடிக்காக இருந்த காலத்திலிருந்தே, அதன் ஒதுக்கீடு 100 மில்லியன் ரிங்கிட் என்ற அளவிலேயே முடங்கிக் கிடந்தது. இன்றுதான் அந்தத் தடை உடைக்கப்பட்டிருக்கிறது," என்று அவர் கூறினார்.
இன்று மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 'இந்திய மாணவர்களுடன் பிரதமர் சந்திப்பு' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னர் பிரதமர்துறை அமைச்சின் கீழ் இயங்கிய மித்ரா, தற்போது மனிதவள அமைச்சின் கீழ் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மலேசிய இந்தியர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக 'மடானி' அரசு வழங்கி வரும் அர்ப்பணிப்பை அவர் வெகுவாகப் பாராட்டினார். இந்தியச் சமூகத்திற்கான உதவிகள் மித்ராவுடன் மட்டும் நின்றுவிடவில்லை என்று குறிப்பிட்ட அவர், ஏனைய அமைச்சுகள் மற்றும் ஏஜென்சிகள் வழியாகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதை நினைவு கூர்ந்தார்.
"அமானா இக்தியார் மலேசியா (AIM) மூலம் இந்தியப் பெண்களின் மேம்பாட்டிற்காக (PENN 2.0) 100 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, தெக்குன் (TEKUN) மூலம் இந்தியச் சமூகத்திற்குச் சிறப்பு நிதியாக 100 மில்லியன் ரிங்கிட்டும், எஸ்எம்இ (SME) வங்கி மூலம் இந்தியத் தொழிலதிபர்களுக்கு 50 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது," என்றார் அவர்.
தமது உரையில் மித்ராவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசிய ரமணன், அடுத்த ஆண்டு முதல் இந்தியச் சமூகத்தின் மனித மூலதன மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறினார்.
பாலர் பள்ளி முதல் உயர்கல்வி மற்றும் உயர் தொழில்நுட்பப் பயிற்சி (TVET) வரை அனைத்து நிலைகளிலும் மித்ரா தனது கவனத்தைச் செலுத்தும் என்றும், இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்க சர்வதேச ரீதியிலான வியூகக் கூட்டணிகள் உருவாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)