சுங்கை பூலோ, ஏப்ரல் 19 (பெர்னாமா) -- மலேசிய இந்திய சமூகத்தின் ஆன்மீகப் பலத்தையும் வருங்காலத் தூண்களான மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஒரே நேர்க்கோட்டில் உயர்த்தும் உன்னத நோக்கில மடானி அரசாங்கம் மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா வழி, நாட்டில் முறையாகப் பதிவு பெற்ற 300 ஆலயங்களுக்கு தலா 20,000 ரிங்கிட் என்று மொத்தம் 60 லட்சம் ரிங்கிட் நிதி வழங்கப்படவுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்து ஆலயங்களில் சமயம், கலை மற்றும் கலாச்சார அம்சங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் அரணாக இந்த 'தர்மா மடானி' நிதி அமைவதாக டத்தோ ஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.
முன்னதாகவே, முதல்கட்டமாக 155 ஆலயங்களுக்கு 31 லட்சம் ரிங்கிட் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக 300 ஆலயங்கள் மித்ராவின் நிதியால் பயன்பெறவுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கான அதிகாரப்பூர்வ நிதியுதவி வழங்கும் விழா, ஏப்ரல் 28-ஆம் தேதி காலை மணி 11.00க்கு, பிரிக்பீல்ட்ஸ் கலா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மொத்தம் 1,000 இந்து ஆலயங்களுக்கு இந்தத் தர்மா மடானி நிதி நேரடியாகப் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் தெரிவித்தார்.
ஆலயங்களுக்கான நிதியைத் தவிர்த்து, தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கவும், அவர்களின் அடைவுநிலையை மேம்படுத்தவும், 80 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான 'கல்வி மடானி' திட்டத்தின் மூலம் இலவசமான பிரத்தியேக வகுப்புகளும் வழிநடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் எஸ்.பி.எம் தேர்வில் 5 ஏ-க்களுக்கு மேல் பெற்று சாதனை படைக்கும் மாணவர்களுக்குத் தமது சேவை மையத்தின் வழி, சிறப்பு வெகுமதிகள் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதனிடையே, மனிதவள அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும், மித்ரா இவ்வாண்டு மேற்கொள்ளவிருக்கும் சில முக்கிய அம்சங்கள் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார்.
இன்று காலை சுங்கை பூலோ நாடாளுமன்ற சேவை மையத்தின் ஏற்பாட்டில், சுபாங் தோட்டத்து ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.
இன்றைய கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட சுமார் 300 பேருக்கு அடிப்படை உதவிப் பொருட்களுடன், மைடின் பேரங்காடியின் பற்றுச்சீட்டையும் ரமணன் வழங்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)