கோலாலம்பூர், மே 10 (பெர்னாமா) -- 'இறைவன் எங்கும் வியாபித்திருக்க முடியாது என்பதால் தான் தாயைப் படைத்திருக்கிறார்' என்ற வாசகம் நிதர்சனமான உண்மையாகும்.
காரணம் ஒரு குழந்தையின் வாழ்க்கையை வடிவமைக்கும் முதல் சக்தி, தாயைச் சேர்ந்ததாகவே இருக்க முடியும்.
அதனால்தான் பிள்ளைகள் பேச கற்றுக்கொள்வதற்கு முன்னரே, அவர்களின் உணர்வுகளைத் தாய்மையால் புரிந்து கொள்ள முடிகிறது.
அத்தகைய அதிசயமிக்க இதயத்தின், அன்பு, அரவணைப்பு, தியாகம், பொறுமை ஆகிய குணநலன்களைப் பாராட்டும் விதமாக இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
பத்து திங்கள் வலிகளையும் வேதனைகளையும் தாங்கி, தூக்கம் மறந்து, பிடித்த உணவுகளைக் கூட ருசி பார்க்க முடியாமல் தள்ளி வைத்து, அரும்பாடுபட்டு பிள்ளையைப் பெற்றெடுக்கும் அந்த நடமாடும் தெய்வத்தை, வாழ்நாள் முழுவதும் போற்றி, கடைசி வரை கண் கலங்காமல் பார்த்து கொள்வதே பிள்ளைகளின் உண்மையான கடமையாகும் என்று பெர்னாமா தமிழ்செய்திகளிடம் சிலர் பகிர்ந்து கொண்டனர்.
அதிலும் சில தாய்மார்களின் அந்த கால அன்னையர் தின நினைவலைகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.
1908-ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி Anna Jarvis என்பவரால், அமெரிக்காவில் முதல் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
அந்நாட்டைப் பின்பற்றி மலேசியா, இந்தியா, இங்கிலாந்து, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, துருக்கி, ஆஸ்திரேலியா, மெக்சிக்கோ, கனடா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் இன்றுவரையில் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் அன்னையர் தினத்தை கொண்டாடி வருகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)