கோரக்பூர், 26 ஏப்ரல் (பெர்னாமா) -- இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 40 பாகை செல்சியசை கடந்துள்ளது.
வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களில் மக்கள் வெயிலில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள தலையை மூடியபடி பயணிக்கின்றனர்.
கடும் வெப்பம் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தவிர்த்து வருவதாக, வட மாநிலமான உத்தரப் பிரதேசம் கோரக்பூரில் வசிக்கும் ஆடவர் ஒருவர் தெரிவித்தார்.
"வெப்பம் மிகவும் கடுமையாக உள்ளது. வெப்பநிலை சுமார் 42 முதல் 44 பாகை செல்சியஸ் வரை உயர்கிறது. இதனைச் சமாளிப்பது மக்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது. வெப்பம் காரணமாகப் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்கின்றனர். வழக்கமாக 10 நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு வேலை கூட, இந்த கடுமையான சூழ்நிலை காரணமாக இப்போது ஒரு மணி நேரம் வரை நீடிக்கிறது," என்று அலாவுதீன் தெரிவித்தார்.
வெப்பம் தொடர்பான நோய்கள் குறிப்பாக குழந்தைகளிடையே, அதிகரித்துள்ளதாகவும் மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் மொராடபாத் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை நோயாளிகளால் நிரம்பிவிட்டதாக அங்கே பணிபுரியும் மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை தொடர்பான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]