ஈப்போ, 25 ஏப்ரல் (பெர்னாமா) -- பள்ளிப் பிள்ளைகளை இளம் வயதிலிருந்தே சமுகப் பணியில் ஈடுபட ஊக்கவிக்கும் நோக்கத்துடன், அவர்களுக்கான புறப்பாட நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொள்ளுமாறு, நாட்டில் உள்ள பள்ளிகளை கல்வி அமைச்சு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக, பேராக், ஈப்போ கம்போங் சிமீ ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தைச் சுத்தம் செய்யும் சமூக பொதுநல பணியில், கம்போங் சிமீ தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியதாக, அப்பள்ளியின் தலைமையாசிரியை கற்பகவள்ளி நடேசன் கூறினார்.
இந்நடவடிக்கை சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த ஆலய நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், மாணவர்களின் சமூக பணி தொடர்ந்து சீராக நடைபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே, மாணவர்களை இளம் வயதிலிருந்தே சமுகப் பணியில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ள திட்டம் வரவேற்கத்தக்கது என்று ஈப்போ ஆசிரியர் பயுற்சிக் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளர் முனைவர் சேகர் நாராயணன் கூறினார்.
மேலும், ஏட்டுக்கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல், இதுபோன்ற வெளி நடவடிக்கைகளிலும் மாணவர்களை தொடர்ந்து ஈடுபடுத்த வேண்டும் என்று முனைவர் சேகர் வலியுறுத்தினார்.
இச்சமூக நடவடிக்கையில் கம்போங் சிமீ தமிழ்ப்பள்ளியின் நான்கு, ஐந்து, ஆறாம் ஆண்டு மாணவர்கள் கலந்துகொண்டு சேவையாற்றினர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]