Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

வெற்றி மடானி திட்டம்; இந்தியர்களுக்கு திறன் பயிற்சியுடன் வேலை வாய்ப்பு

25/04/2026 07:51 PM

கோலாலம்பூர், ஏப்ரல் 25 (பெர்னாமா) -- மனிதவள மேம்பாட்டுக் கழகமான H-R-D CORP-இன் வெற்றி மடானி திட்டம், ஈராயிரம் பேருக்கு திறன் பயிற்சியுடன் வேலை வாய்ப்பையும் உறுதி செய்யும்.

இதில் மலேசிய இந்திய சமூகத்திற்கு பயிற்சி திட்டங்களை வழங்கி, அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தி தருவது இத்திட்டத்தின் முக்கிய இலக்காகும் என்று, மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

“இது நமது சமுதாயத்திற்கு ஒரு வாய்ப்பு. ஏ.ஐ, இயந்திர திறன் உட்பட பயிற்சிகள் இங்கு வழங்கப்படும். ஒரு கோடி ரிங்கிட் ஒதுக்கியிருக்கிறோம். இரண்டாயிரம் பேருக்காக,” என்றார் அவர்.

இத்திட்டத்தில் பல சமுதாயத் தலைவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், தங்களது பகுதி மக்களை இத்திட்டம் சென்றடைவதையும் அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த பயிற்சியை முழுமையாக முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

அதே வேளையில், எளிதாக வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கான வழிமுறைகளும் இருப்பதாக ரமணன் விளக்கினார்.

இன்று கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸில் Vetri MADANI கண்காட்சியை தொடக்கி வைத்தப் பின்னர், செய்தியாளர்களிடம் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

மற்றொரு நிலவரத்தில், வீட்டிலிருந்து பணிபுரிதல் அல்லது கலப்பு முறை போன்ற நெகிழ்வான பணி செயல்முறையை அமல்படுத்துவதைப் பரிசீலிக்கும்படி பிரதமர் கேட்டுக் கொண்டதை தனியார் நிறுவனங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றன.

தங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு பொருத்தமானதாக இருந்தால், இந்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும்படி அரசாங்கம் ஊக்குவிப்பதாக ரமணன் தெரிவித்தார்.

“பல பெரிய நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறையை அமல்படுத்தியிருக்கின்றன. மேலும், பெரும்பாலான வங்கிகளும் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறையைப் பின்பற்றுகின்றன. எனவே, தனியார் நிறுவனங்களும் இந்த வழியைப் பின்பற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார் அவர்.

முன்னதாக, சுமார் 70 கோடி ரிங்கிட்டாக இருந்த பெட்ரோல் உதவித் தொகையின் செலவு, தற்போது மாதத்திற்கு 400 கோடி ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது.

எனவே, மக்களின் நலன்களின் பாதுகாப்பிற்கு இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)