கோலாலம்பூர், 25 ஏப்ரல் (பெர்னாமா) -- 2018-ஆம் ஆண்டு ஜப்பானில் நிகழ்ந்த கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த அந்நாட்டின் குற்றவாளி ஒருவரை, மலேசிய போலீஸ் நேற்று அந்நாட்டிற்கு திரும்ப அனுப்பியது.
அனைத்துலக போலீசாரின் சிவப்பு அறிவிக்கையில் பட்டியலிடப்பட்ட நபர்களைக் கண்டறிய உதவுமாறு, ஜப்பானிய அமலாக்கத் தரப்பினர் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை, ஜே.எஸ்.ஜே இயக்குநர் டத்தோ எம். குமார் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
1952-ஆம் ஆண்டு அபாயகரப் போதைப்பொருள் சட்டம் செக்ஷன் 12(2) மற்றும் செக்ஷன் 15 (1)(a) உட்பட, 1959/63-ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டம் செக்ஷன் 6 (1)(c)-இன் கீழ் கெடா மாநில போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை, ஜே.எஸ்.ஜே.என் அச்சந்தேக நபரை முன்னதாக கைது செய்ததாக டத்தோ குமார் கூறினார்.
அந்நபர் தமது அடையாளத்தையும் குடியுரிமையையும் மியன்மார் பிரஜையாக மாற்றிக்கொண்டது அக்கைது நடவடிக்கையின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கைரேகை ஒப்பீடுகள் மற்றும் புகைப்படங்கள் மூலமான முகத்தை அடையாளம் காணும் செயல்முறையின் அடிப்படையில், அறிவியல் மற்றும் தடயவியல் விசாரணைகளின் முடிவுகள் அந்நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தியதாக குமார் குறிப்பிட்டார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]