Ad Banner
 விளையாட்டு

மூன்றாவது உலக சாதனை முயற்சியில் தீவிரமாக களமிறங்கியிருக்கும் ஜெய் பிரபாகரன்

22/04/2026 06:07 PM

குவாந்தான், ஏப்ரல் 22 (பெர்னாமா) --  உடற்பயிற்சியில் இரு உலக சாதனை, ஐந்து தேசிய சாதனை, ஓர் ஆசிய சாதனையைப் படைத்திருக்கும் ஜெய் பிரபாகரன் குணசேகரன், தமது 29-வது வயதில் மூன்றாவது உலக சாதனையைப் படைக்கும் இலக்கில் களமிறங்கியுள்ளார்.

பகாங், கோலா லிப்பிசை சேர்ந்த அவர், உடற்பயிற்சியில் தம்மை முழு நேரமாக அர்ப்பணித்து வரும் நிலையில் வளரும் தலைமுறைக்கு உடற்பயிற்சிகளை ஊக்குவிக்கும் சங்கம் ஒன்றையும் நிறுவி சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

கடந்த 2023-ஆம் ஆண்டில் 12 மணிநேரம் இடைவிடாது உடற்பயிற்சி செய்து உலக அளவில் சாதனைப் படைத்த பின்னர், அதற்கு அடுத்த ஆண்டே அச்சாதனையை முறியடிக்கும் வகையில் 15 மணிநேர உடற்பயிற்சியை செய்திருந்ததாக ஜெய் பிரபாகரன் கூறினார்.

தற்போது மூன்றாவது சாதனையைப் படைப்பதற்காக கடந்த இரண்டு சாதனைகளைக் காட்டிலும் கூடுதலான உடற்பயிற்சியிலும், கட்டுப்பாடு நிறைந்த மாறுபட்ட உணவு பழக்க வழக்கத்தையும் தாம் முழுமையாக பின்பற்றி வருவதாக அவர் விவரித்தார்.

"தற்போது அந்த 15 மணிநேரத்தை 18 மணிநேரமாக மாற்றுவதே எனது மூன்றாவது உலக சாதனை. அதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். எனது முயற்சி என்னை வெற்றி பெற வைக்கும் என்று நம்புகிறேன்,'' என்று அவர் குறிப்பிட்டார்.

இன்னும் ஆறு வாரங்களில், அதாவது மே மாத இறுதியில், பகாங் குவாந்தானில் தாம் இந்த மூன்றாவது உலக சாதனையைப் புரியவிருப்பதாகவும் ஜெய் பிரபாகரன் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, உடற்பயிற்சிக்கான அவசியம் மற்றும் அதில் அதிகமானோரை குறிப்பாக இந்திய இளைஞர்களை இணைக்கும் விதமாக அரசாங்கத்துடன் இணைந்து MYFIT என்ற புதிய சங்கத்தை அமைத்து, அதன் மூலம் அதிகமானோரை ஊக்குவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது வெறும் உடலுக்கான பயிற்சியாக மட்டும் நினைக்காமல் உள மற்றும் ஒழுக்கத்தை ஊட்டும் பயிற்சியாகவும் கருதி, இந்திய இளைஞர்கள் அதிகமானோர் உடற்பயிற்சியிலும் விளையாட்டுத்துறையிலும் ஈடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தமது மூன்றாவது உலக சாதனை குறித்து பெர்னாமா செய்திகளிடம், அவர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)