பாசிர் மாஸ், 22 ஏப்ரல் (பெர்னாமா) -- கடந்த மாதம் 12 மியான்மார் மற்றும் வங்காளதேச புலம்பெயர்ந்தோரை சட்டவிரோதமாகக் கடத்திய சம்பவத்தில் முதன்மை நபர்களாக இருந்த இருவர் மீது, இன்று பாசிர் மாஸ் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டுள்ளதால், நீதிபதி சுல்கிப்லி அப்துல்லா முன்னிலையில் அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், 48 வயதான முஹமட் ரொசி இசா மற்றும் 31 வயதான சொலிம் சுல்தான் அமின் ஆகியோரிடமிருந்து எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை, U-N-H-C-R--யின் அட்டைகளை வைத்திருக்கும் முஹமட் ரொசியும் சொலிம் சுல்தானும், பெரோடுவா பெசா ரக காரைப் பயன்படுத்தி எட்டு மியான்மார் பிரஜைகளையும் நான்கு வங்காளதேச பிரஜைகளையும் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 25-ஆம் தேதி, இரவு மணி 11-க்கு, தும்பாட், ச்சாபாங் அம்பாட்டில் உள்ள கம்போங் தெலகா பாத்தாவில், அவ்விருவரும் அக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2007-ஆம் ஆண்டு ஆள்கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தலைத் தடுக்கும் சட்டம், செக்ஷன் 26A-வின் கீழ் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறைத் தண்டனையும், அபராதமும் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு மே 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]