Ad Banner
Ad Banner
 பொது

இந்தியாவைத் தெரிந்து கொள்வோம் திட்டம்; மலேசியாவைப் பிரதிநிதித்து நால்வர் பங்கேற்பு

03/03/2026 04:45 PM

கோலாலம்பூர், மார்ச் 03 (பெர்னாமா) -- இந்தியாவின் வரலாறு, ஆட்சி அமைப்பு, புத்தாக்கம் உட்பட பல அம்சங்களை உள்நாடு மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் தெரிந்துக் கொள்ளும் வகையில் KIP எனப்படும் இந்தியாவைத் தெரிந்து கொள்வோம் திட்டத்தை அந்நாட்டு வெளியுறவு அமைச்சு பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

87-ஆவது முறையாக மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தில் மலேசியாவை பிரதிநிதித்து பல்கலைகழகம் மற்றும் இதர அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு இந்தியாவின் வரலாற்று அம்சங்களை நேரடியாக அறிந்து தெரிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.

இவ்வாண்டு பிப்ரவரி எட்டாம் தேதி தொடங்கி பிப்ரவரி 27-ஆம் தேதி வரையில் மூன்று வாரங்களாக இத்திட்டம் நடத்தப்பட்டது.

இதில் பேராக் மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் தகவல் பிரிவுத் தலைவர் கரண் ராஜ் சந்திரா, மலாயாப் பல்கலைக்கழகத்தின் முதுகலை மாணவர் கீர்த்தி லிங்கம், தகவல் தொழில்நுட்பத் துறையில் உதவி அமைப்பு பொறியியலாளர் டாஷன் செல்வராஜூ, நெகிரி செம்பிலான் மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் தலைவர் ஹேமநாத் ஆர். சியாமலரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

15 நாடுகள் கலந்து கொண்ட இத்திட்டத்தில் தாஜ்மஹால், இந்தியா கேட், அருங்காட்சியகம், கல்வி கழகங்கள், ஆலயங்கள் உட்பட பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கரண் ராஜ் சாந்திரா தெரிவித்தார்.

இதனிடையே, இத்திட்டத்தில் கலந்து கொள்ள 21 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் நிலையில், அதற்கான இதர தகுதிகள் குறித்தும் கரண் ராஜ் விளக்கினார்.

''அதோடு, இளங்கலை பட்டதாரியாக இருக்க வேண்டும். வெளிநாட்டு இந்திய குடியுரிமை தகுதி (Overseas Citizenship of India) பெற்றிருக்க வேண்டும்,'' என்றார் அவர்.

மற்ற நாடுகளிலுல் இருந்து வந்த இளைஞர்களுடனும் நல்ல தொடர்பில் இருக்க முடிந்ததாகவும் மலேசியாவைப் பற்றிய தகவல்களையும் பரிமாறிக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

இதுபோன்ற வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டால், உலகளாவிய பார்வை, பண்பாடு, கலாச்சாரம், தொழில்முறை திறன்களை தெரிந்துக் கொள்ள முடியும் என்றும் கரண் ராஜ் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)