கோலாலம்பூர், மார்ச் 02 (பெர்னாமா) -- மத்திய கிழக்கு பகுதிகளில் அதிகரித்து வரும் பதற்றத்தை அடுத்து, அவ்வட்டாரத்தில் இருக்கும், 29,112 மலேசியர்களின் பாதுகாப்பை மலேசிய அரசாங்கம் தற்போது அணுக்கமாக கண்காணித்து வருகிறது.
அங்கு தங்கி பணிபுரியும் மலேசியர்கள் மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகள் மற்றும் புனித யாத்திரிகளும் அதில் அடங்குவதாக கூறிய டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், வான்வெளி மூடல் மற்றும் விமான சேவை தடைகள் காரணமாக அவர்கள் தற்போது இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள மலேசியர் ஒவ்வொருவரின் அண்மைய நிலவரத்தை கண்காணித்து, தூதரக உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக விஸ்மா புத்ரா வெளியுறவு அமைச்சின் வழி செயற்பாட்டு அறை ஒன்றை அமைத்துள்ளதாக
டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
"நாங்கள், குறிப்பாக விஸ்மா புத்ரா, நெருக்கமாக கண்காணித்து வருகிறோம். இதில் ஒரு பகுதி மலேசியத் தூதரகங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது விமானப் போக்குவரத்து தடையால் சிரமம் இருந்தாலும், அவர்களை மீண்டும் அழைத்து வருவதற்கு ஒத்துழைப்பு தேவைப்படுவதால் தொடர்பு கொண்டு வருகிறோம். சவூதி அரேபியாவிலிருந்து விமானங்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் மற்ற நாடுகளில் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.," என்றார் அவர்.
அவசர நிலை ஏற்பட்டால், அங்குள்ள மலேசியர்களை திரும்ப நாட்டிற்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் உட்பட, உதவிகளை ஒருங்கிணைக்கவும் நியாயமான பயண ஆலோசனைகளை வழங்கவும் விஸ்மா புத்ரா தொடர்ந்து தூதரகத்தைத் தொடர்பு கொள்ளும் என்று அன்வார் இன்று மக்களவையில் கூறினார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்டு வரும் இராணுவ தாக்குதலில், அந்நாட்டின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமெனி, தற்காப்பு அமைச்சர் ஜெனரல் அஜீஸ் நசிர்சாதே மற்றும் முன்னாள் அதிபர் மஹ்மூட் அஹ்மதிநெஜாத் உள்ளிட்ட பலர் உயிரிழந்த நிலையில் பிரதமர் தமது இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)