Ad Banner
Ad Banner
 பொது

அரசாங்கத்தைக் கவிழ்க்கும் விவகாரம்; விசாரணையில் அவசரம் கூடாது

28/02/2026 04:14 PM

கோலாலம்பூர், 28 பிப்ரவரி (பெர்னாமா) -- அரசாங்கத்தை கவிழ்த்து நாட்டின் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் சதித்திட்டம் தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் அரச மலேசிய போலிஸ் படை, பி.டி.ஆர்.எம் முழுமையான விசாரணையை நடத்தி வருகிறது. 

இவ்விவகாரத்தை விசாரிப்பதற்குப் போதுமான கால அவகாசம் தேவைப்படுவதாகவும், சட்டச் செயல்முறையின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு அதனை அவசரமாக மேற்கொள்ள முடியாது என்றும், தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்திருக்கிறார்.

ஒவ்வொரு விவரமும் முழுமையாகவும் தொழில்முறை ரீதியாகவும் துல்லியமாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே எந்தவோர் அடுத்தக்கட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று இன்று தொடர்புகொண்டபோது டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் கூறினார். 

இந்நிலையில், அனைத்து தரப்பினரையும் பொறுமை காக்கும்படியும், இது தொடர்பிலான புதிய தகவல்கள் இருக்கும் பட்சத்தில் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

அரசாங்கத்தை கவிழ்க்கவும், நாட்டின் நிலைத்தன்மையைச் சீர்குலைக்கவும், அனைத்துலக ஊடக நிறுவனத்துடன் இணைந்து செல்வாக்கு மிக்க உள்நாட்டவர் ஒருவர் முயற்சிகள் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தமது தரப்பு புகார் பெற்றதாக டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]