போர்ட் டிக்சன், 23 பிப்ரவரி (பெர்னாமா) -- ஞாயிற்றுக்கிழமை, சிரம்பான் நோக்கிச் செல்லும் சிரம்பான் - போர்ட் டிக்சன் நெடுஞ்சாலை, S-P-D-H-இன் 16.6-வது கிலோமீட்டரில் மூன்று வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஐந்து வயது சிறுமி உயிரிழந்தார்.
PLUS நெடுஞ்சாலையின் அவசர பணியாளர்கள், அதே நெடுஞ்சாலையின் நான்கு சக்கர ரோந்து வாகனம், மற்றும் ஹொண்டா சி.ஆர்-வி ரக வாகனத்தை உட்படுத்தி இவ்விபத்து நிகழ்ந்ததாக, Port Dickson மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிதெண்டன் மஸ்லான் உடின் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் ஹொண்டா சி.ஆர்-வி காரின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர், அவர் இரவு மணி 8.10 அளவில் போர்ட் டிக்சனில் உள்ள யூ.சி.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவத்திற்கு முன்னதாக, சாலையை விட்டு தடம் புரண்ட ஒரு வாகனத்திற்கு உதவி செய்வதற்காக PLUS நிறுவனத்தின் அவ்விரு வாகனங்களும் அவசரப் பாதையில் நின்றதாக தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அப்போது கடுமையாக மழை பெய்ததாகவும், தெரு விளக்குகள் இல்லாமல் அந்தப் பகுதி இருள் சூழ்ந்து இருந்ததாகவும் சுப்ரிதெண்டன் மஸ்லான் கூறினார்.
அவ்வேளையில், அதே திசையை நோக்கி வந்த ஒரு ஹொண்டா சி.ஆர்-வி கார் கட்டுப்பாட்டை இழந்து, சறுக்கி, PLUS லாரியின் பின்புறத்தில் மோதியதாகவும் தெரிய வருகிறது.
அதனால் அந்த லாரி முன்நகர்ந்து PLUS ரோந்து வாகனத்தின் பின்புறத்தில் மோதியதாக நம்பப்படுகிறது.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவரின் பெற்றோரும் காயமடைந்ததாகவும், தற்போது போர்ட் டிக்சன் மற்றும் யூ.சி.எஸ்.ஐ மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் மஸ்லான் தெரிவித்தார்.
1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் செக்ஷன் 41 உட்பிரிவு ஒன்றின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]