கோத்தா கினாபாலு, 23 பிப்ரவரி (பெர்னாமா) -- சபா கடல் பகுதியில் நேற்று பின்னிரவு மணி 12.57-க்கு 6.8 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது.
எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இந்நிலநடுக்க, 7.0 பாகை வடக்கு மற்றும் 116.4 பாகை கிழக்கு, 678 கிலோமீட்டர் ஆழத்தில் மையமிட்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா இன்று காலை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி சபா, கூடாட்டில் இருந்து மேற்கே 49 கி.மீ தொலைவில் அமைந்திருந்ததாக மெட்மலேசியா மேலும் தெரிவித்தது.
சபாவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் சரவாக் உட்பட தீபகற்ப மலேசியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது.
தமது தரப்பு அவ்வப்போது நிலைமையைக் கண்காணித்து வருவதாக அம்மையம் கூறியது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளை உணர்ந்த பொதுமக்கள் https://forms.gle/bRkJBUqLEPAf8KVw9 எனும் இணைப்பில் உள்ள கேள்வித்தாளை பூர்த்தி செய்து தகவல்களை வழங்குமாறு அத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]