கோலாலம்பூர், 22 பிப்ரவரி (பெர்னாமா) -- திரெங்கானு அரசு குடும்பத்திற்கு எதிராக அச்சுறுத்தும், அவமதிக்கும் மற்றும் புண்படுத்தும் உள்ளடக்கத்தை X தளத்தில் உள்ள தமது சொந்த சமூக ஊடக கணக்கில் பதிவேற்றம் செய்ததாக நம்பப்படும் ஆடவரின் செயலை, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சி விசாரித்து வருகிறது.
பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த உள்ளடக்கம் அரசாங்க நிறுவனங்களின் உணர்வுப்பூர்வ தன்மையை களங்கப்படுத்துவதோடு, வெறுப்பு, மக்கள் மத்தியில் பதற்றம் மற்றும் பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அவமானங்களையும் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்துவதாகவும் எம்.சி.எம்.சி குறைக் கூறியது.
நேற்று, லஞ்சாங் போலீஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட குரல் பதிவு அமர்விற்கு அவ்வாடவர் அழைக்கப்பட்டதாக எம்.சி.எம்.சி தெரிவித்தது.
இலக்கவியல் தடயவியல் பரிசோதனைக்காக சந்தேக நபரின் கைத்தொலைப்பேசி உட்பட சிம் அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டது.
1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் செக்ஷன் 233-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 5 லட்சம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
அரசாங்க நிறுவனங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், வெறுப்பைத் தூண்டும் அல்லது அவமதிக்கும் கூறுகளைக் கொண்ட உள்ளடக்கங்களை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யும் தரப்பினர் மீது ஒருபோது சமரசம் செய்யப்படாது என்று எம்.சி.எம்.சி வலியுறுத்தியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)