கோலாலம்பூர், பிப்ரவரி 21 (பெர்னாமா) -- கழகக் கட்டொழுங்கை வலுப்படுத்தவும் தொழில்துறை மீதான நம்பிக்கையைப் பாதுகாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவும் தனது நிர்வாகக் குழுவில் கூடுதலாக மூன்று உறுப்பினர்களை மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD CORP இடைநீக்கம் செய்துள்ளது.
இத்தகைய நடவடிக்கை நிர்வாகத் தரங்களை உயர்த்துவதற்கும் தேசிய பணியாளர் மேம்பாட்டு வளங்கள், வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் பொறுப்புணர்வுடன் நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக HRD Corp-ப்பின் தலைமை நிர்வாகி டத்தோ ஷமிர் அசிஸ் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
வணிக நம்பிக்கைக்கு வலுவான நிர்வாகம் அடிப்படையானது என்று கூறிய அவர், தெளிவு, கணிக்கக்கூடியத்தன்மை மற்றும் ஒழுக்கமான நிர்வாகத்தையே முதலாளிகள் எதிர்பார்ப்பதாகவும் அவ்வறிக்கையில் கூறியிருந்தார்.
அந்த எதிர்பார்ப்பை நிறுவனம் தொடர்ந்து நிறைவேற்றுவதை உறுதி செய்ய, HRD Corp அதன் அமைப்புகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் உள் மதிப்பாய்வின் சுதந்திரத்தைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடைமுறைகளாகவே, இந்த இடைநீக்கம் இருந்துள்ளதாகக் கூறிய அவர், கழகத்தில் தவறு நடந்ததற்கான எவ்வித முடிவையும் அது பிரதிபலிக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
முதலாளிகளும் பயிற்சி வழங்குநர்களும் சிறப்பாக சேவை செய்வதற்காக, நிர்வாக கட்டமைப்புகளை நவீனமயமாக்குதல், பொறுப்புணர்வுக்கான வழிமுறைகளை வலுப்படுத்துதல் மற்றும் நிர்வாக செயல்முறைகளை நெறிப்படுத்துதல் ஆகியவற்றை உட்படுத்தி சரியான மேம்பாடுகள் செயல்படுத்தப்படுவதாகவும் டத்தோ ஷமிர் அசிஸ் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)