கோலாலம்பூர், பிப்ரவரி 21 (பெர்னாமா) -- இஸ்லாமியர்கள் ரமலானைக் கொண்டாடும் அதே வேளையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சபா மக்களின் நல்வாழ்வுக்காக, அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுமாறு துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி கோரிக்கை விடுத்துள்ளார்.
அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடர், குடியிருப்புப் பகுதிகள், பாதுகாப்பு மற்றும் அங்கு வசிப்போரின் அன்றாட வாழ்க்கையையும் வெகுவாகப் பாதித்துள்ளதாக இன்று தமது முகநூல் பதிவில் அவர் தெரிவித்திருந்தார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி புரியும் வகையில் வெளியேற்றம், மீட்பு மற்றும் உதவி விநியோக நடவடிக்கைகள் விரைவாகவும், முறையாகவும், அதேவேளையில் திறம்படவும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து மத்திய மற்றும் மாநில அரசாங்க நிறுவனங்களும் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக சாஹிட் கூறினார்.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, பாதிக்கப்பட்டவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைவாக மீட்டெடுப்பது ஆகியவற்றிற்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள், விழிப்புடன் இருப்பதோடு, அதிகாரிகளின் உத்தரவுகளை பின்பற்றும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதனிடையே, சபாவில் நேற்று மாலை நிலவரப்படி 124 குடும்பங்களைச் சேர்ந்த 406 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த வேளையில், இன்று காலை மணி 8 நிலவரப்படி அது 1,593 குடும்பங்களைச் சேர்ந்த 3,685 பேராக தொடர்ந்து அதிகரித்துள்ளது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தரும் வகையில் கோத்தா மருடு, பித்தாஸ், பைத்தான் ஆகிய மாவட்டங்களை உட்படுத்தி 18 தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் சபா மாநில பேரிடர் நிர்வகிப்பு செயலகம் தெரிவித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)