இந்தியா, 21 பிப்ரவரி (பெர்னாமா) -- புது டெல்லியில் நடைபெற்ற இந்திய ஏ.ஐ தாக்க உச்சநிலை மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்நாட்டின் ஆழமான தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்தார்.
அவர்களில், அப்ரிட்ஜ், கிரெடோ ஏ.ஐ, ஏகா கேர் மற்றும் க்ளீன் உள்ளிட்ட குறைந்தது 16 நிறுவனங்களின் தலைமை செயல்முறை அதிகாரிகளும் அடங்குவர்.
இந்தியாவின் முதல் பெரிய ஏ.ஐ உச்சநிலை மாநாடு என்பதால், இந்தக் கூட்டம் கூகளின் சுந்தர் பிச்சை, ஓபன்ஏ.ஐ-இன் சேம் அல்ட்மேன் மற்றும் அன்ட்ரோபிக்கின் டாரியோ அமோடி போன்ற தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மோடி உலகளாவிய தலைவர்களுடன் தொடர் இருவழி சந்திப்புகளை நடத்திய வேளையில், Qualcomm தலைமை செயல்முறை அதிகாரி கிறிஸ்டியானோ அமோன் மற்றும் ஓபன்ஏ.ஐ-இன் அல்ட்மேன் ஆகியோர் அவரைத் தனித்தனியாக வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.
இந்த மாநாட்டில், பிரதிநிதிகள் ஏ.ஐ அணுகல், கணினியின் ஏற்றத்தாழ்வு மற்றும் சக்திவாய்ந்த எதிர்கால அமைப்புகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்து விவாதித்தனர்.
இதனிடையே, இந்த மாநாடு நடைபெறும் கண்காட்சி மண்டபத்திற்குள் எதிர்க்கட்சியான காங்கிரசின் இந்திய இளைஞர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இளைஞர்களிடையே வேலையில்லா பிரச்சனை மற்றும் அண்மையில் அறிவிக்கப்பட்ட அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றில் அதிருப்தி தெரிவித்து இப்போராட்டம் நடத்தப்பட்டதாக இந்திய இளைஞர் காங்கிரசின் தேசியத் தலைவர் உதய் பானு சிப் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)