Ad Banner
Ad Banner
 உலகம்

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, நாட்டிற்கு அவமானம் - டிரம்ப் சாடல்

21/02/2026 03:55 PM

வாஷிங்டன் டி.சி., 21 பிப்ரவரி (பெர்னாமா) -- அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து கருத்துரைக்கும் அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப், இந்த முடிவு நாட்டிற்கு அவமானம் என்று சாடியுள்ளார்.

அமெரிக்க உச்ச நீதிமன்றம் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்த சில அவசரகால கட்டணங்களுக்குப் பதிலாக, 10 விழுக்காடு உலகளாவிய வரியை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திடுவதாகவும், கிட்டத்தட்ட அது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் தமது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

''எனவே செக்‌ஷன் 232 மற்றும் ஏற்கனவே உள்ள செக்‌ஷன் 301 வரிகளில் கீழ் உள்ள அனைத்து தேசிய பாதுகாப்பு வரிகளும் உடனடியாக அமலுக்கு வருகின்றன. அவை உள்ளன, அவை நடப்பில் உள்ளன, நடைமுறையில் உள்ளன. முழுமையாகவும் முற்றிலும் நடைமுறையில் உள்ளன. ஏற்கனவே வசூலிக்கப்படும் நமது வழக்கமான வரிகளுக்கு மேலாக, செக்‌ஷன் 122-இன் கீழ் 10 விழுக்காடு உலகளாவிய வரியை விதிக்க இன்று நான் உத்தரவில் கையெழுத்திடுவேன். மேலும், பிற நாடுகள் மற்றும் நிறுவனங்களின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளிலிருந்து நமது நாட்டைப் பாதுகாக்க பல செக்‌ஷன் 301 மற்றும் பிற விசாரணைகளையும் நாங்கள் தொடங்கி வருகிறோம்,'' என்றார் அவர்.

இவ்விவகாரத்தில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தையும், தாம் நியமித்த இரண்டு நீதிபதிகள் உட்பட, உலகளாவிய வரிகளை ரத்து செய்த ஆறு நீதிபதிகளையும் சாடிய டிரம்ப், தம்மை ஆதரித்த மூன்று நீதிபதிகளைப் பாராட்டியுள்ளார்.

மற்றொரு நிலவரத்தில், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை தமது நிர்வாகம் தொடரும் என்று கூறிய அவர், அனைத்துலக அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் முன்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட ஒப்பந்தங்கள் சில தொடரப்படவிருப்பதோடு, மற்றவற்றில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

''இந்தியாவுடனான ஒப்பந்தம் தொடரப்படும். அனைத்து ஒப்பந்தங்களும் தொடரப்ப்படும். நாங்கள் அதை வேறு வழியில் மேற்கொள்ளப் போகிறோம்,'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவுடனான வர்த்தக உறவைப் பற்றி உரையாற்றிய டிரம்ப், திருத்தம் செய்யப்பட்டதன்படி இந்தியா வரிகளை செலுத்த வேண்டி இருப்பதாகவும், இது கடந்த கால நடைமுறையில் ஏற்பட்ட மாற்றமாகும் என்றும் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)