அமெரிக்கா, 21 பிப்ரவரி (பெர்னாமா) -- தேசிய அவசரநிலைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு சட்டத்தின் கீழ் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விதித்த கடுமையான வரிகள் சட்டவிரோதமானது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
அனைத்துலக அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், IEEPA-வின் கீழ் உள்ள வரி கொள்கைகள் அரசியலமைப்பிற்கு விரோதமானவை என்று குறிப்பிட்ட அமெரிக்க உச்ச நீதிமன்றம், ஏப்ரல் முதல் டிரம்ப் அறிமுகப்படுத்திய உலகளாவிய வரிகளை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்தது.
கிட்டத்தட்ட அனைத்து அமெரிக்க வர்த்தக பங்காளிகளிடமிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிகளை விதிக்க IEEPA-இன் கீழ், அதிபருக்கும் அதிகாரம் இல்லை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
வரிகளை விதிக்க அதிபருக்கு உரிமை அல்ல.
மாறாக, அது காங்கிரசின் உரிமை என்பதை வாக்கெடுப்பு உறுதிப்படுத்தியது.
இந்தத் தீர்ப்பு உலகளாவிய வர்த்தகம், நிறுவனங்கள், பணவீக்கம் மற்றும் ஒவ்வொரு அமெரிக்கப் பிரஜையின் பணப்புழக்கத்தையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டன.
2025ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி, அமெரிக்கவின் 12 கூட்டணி மாநிலங்களின் , நியூயார்க்கில் உள்ள அமெரிக்க அனைத்துலக வர்த்தக நீதிமன்றத்தில் சட்டவிரோத வரிகள் தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடர்ந்தன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி, அனைத்துலக வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பை கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒன்று உறுதி செய்ததோடு, டிரம்ப் வரிகளை விதிக்க IEEPA வை தவறாகப் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டது.
2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், டிரம்ப் நிர்வாகம் அந்த வரிகளின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து தீர்ப்பளிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)