ஜோகூர் பாரு, 20 பிப்ரவரி (பெர்னாமா) -- ஜோகூர், சிகாமாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டின் முன்புறத்தில் பட்டாசு விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென அப்பட்டாசு வெடித்து ஆடவர் ஒருவருக்கு ஏற்பட்ட பலத்த காயத்தினால் கால் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சட்டவிரோத பொருட்களை விற்பனை செய்ததாக நம்பப்படும் பட்டாசு விற்பனையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர் வாங்கியப் பட்டாசுகள் அங்கீகரிக்கப்படாத வகையைச் சேர்ந்தவை என்பதும், அவை வைத்திருப்பதற்கும் இறக்குமதி செய்வதற்கும் அனுமதிக்கப்பட்ட 45 வகையான பட்டாசுகளில் பட்டியலிடப்படவில்லை என்பதும் தொடக்கக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக, ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹமான் அர்சாட் தெரிவித்தார்.
32 வயதான அவ்வாடவர் 16 வெடிகள் கொண்ட shoot cake வகை வானவெடியை வெடித்து கொண்டிருந்தபோது நள்ளிரவு மணி 12.30 அளவில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
''தொடக்கக்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர் வெடித்த பட்டாசுகள் மலேசியாவில் அங்கீகரிக்கப்படாத பட்டாசுகளின் வகையைச் சேர்ந்தவை என்பதைக் கண்டறிந்தோம். அது என்னவென்றால், சம்பவம் நடந்த நேரத்தில் அவை சட்டவிரோதமாக வாங்கப்பட்டு, சொந்தமாக வைக்கப்பட்டு, வெடிக்கப்பட்டன. இவ்வழக்கு, 1957-ஆம் ஆண்டு வெடிபொருள் சட்டம் செக்ஷன் 6 மற்றும் செக்ஷன் 8-இன் கீழ் விசாரணை நடத்தப்படுகின்றது'', என்றார் அவர்.
தொடக்கத்தில் சிகாமாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாதிக்கப்பட்ட அவ்வாடவர், தற்போது மலாக்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)