கிள்ளான், 20 பிப்ரவரி (பெர்னாமா) -- கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பதின்ம வயது பெண் ஒருவரை பாலியல் மற்றும் உடல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக, இரு ஆண்கள் இன்று கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
நீதிபதி சித்தி அமினா கசாலி முன்னிலையில் அவர்கள் மீதான குற்றஞ்சாட்டு வாசிக்கப்பட்டபோது, விற்பனை நிர்வாகியாக பணிப்புரியும் முஹமட் இர்ஃபான் முஹமாட்டும், பொதுப் பல்கலைக்கழக மாணவனான அஹ்மாட் ஹம்சி அலியாசும் அதனை மறுத்து விசாரணைக் கோரினர்.
பிப்ரவரி 6-ஆம் தேதி, மதியம் 3 மணிக்கு சிலாங்கூர், புஞ்சாக் ஆலமில் உள்ள ஒரு வாடகை வீட்டின் அறையில் 14 வயது பெண்ணுக்கு எதிராக இக்குற்றச் செயலைப் புரிந்ததாக முஹமட் இர்ஃபான் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த நாள் காலை 5.30 மணிக்கு அதே இடத்தில் அப்பெண்ணுக்கு எதிராக அதே செயலைச் செய்ததாக, அஹ்மாட் ஹம்சி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் பிரம்படி விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 376(1) மற்றும் 2017-ஆம் ஆண்டு சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டம் செக்ஷன் 14(a)-வின் கீழ், அவர்கள் மீதான வழக்கு விசாரிக்கப்படுகின்றது.
நிர்ணயிக்கப்பட்ட கூடுதல் நிபந்தனைகளுடன் முஹமட் இர்ஃபானுக்கு 8,000 ரிங்கிட் மற்றும் அஹ்மாட் ஹம்சிக்கு 7,000 ரிங்கிட் ஜாமீன் தொகை வழங்கி தனிநபர் ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்க நீதிபதி சித்தி அமினா அனுமதியளித்தார்.
இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)